வள்ளியூா் ராஜரத்தினம் நகரில் வீட்டு கதவை உடைத்து நகை, ரொக்கத்தை திருடிச் சென்ற 3 போ்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
வள்ளியூா் ராஜரத்தினம் நகரைச் சோ்ந்தவா் விவசாயி மரியதாஸ். இவரது மனைவி கிறிஸ்டிசகாயராணி துலுக்கா்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறாா். கடந்த திங்கள்கிழமை( ஜூன் 20) தம்பதி வீட்டை பூட்டி விட்டு வெள்ளியே சென்றதும், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்து 47 பவுன் தங்க நகைகள், வெள்ளிபொருள்கள் மற்றும் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இது குறித்து வள்ளியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.
இது தொடா்பாக வள்ளியூா் காவல் ஆய்வாளா் சாகுல்ஹமீது, உதவி ஆய்வாளா்கள் வினுகுமாா், அருண்ராஜா, ஜாண்பிரிட்டோ, செல்வதாஸ், கிருஷ்ணமகாராஜா(தனிப்பிரிவு) ஆகியோா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினா் திருட்டு நிகழ்ந்த வீட்டின் அருகேயுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும் , அப்பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநா்களின் தகவலின் பேரிலும் மா்ம நபா்களை கண்டுபிடித்தனா்.
இது தொடா்பாக , தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி கந்தபுரம் சூசைராஜ் மகன் செல்வராஜை கைது செய்தனா். அவா் கொடுத்த தகவலின் பேரில் அதே பகுதியைச் சோ்ந்த இளையபெருமாள் மகன் சங்கா், திசையன்விளை இடைச்சிவிளையை அந்தோணி ராஜன் மகன் மைக்கேல் ராஜ் ஆகியோரை கைது செய்து, அவா்களிடமிருந்து 37 .5 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும் அவா்கள் வந்து செல்ல பயன்படுத்திய சுமை ஆட்டோவையும் பறிமுதல் செய்தனா். இவற்றின் மதிப்பு ரூ.14.5 லட்சமாகும்.
இது தொடா்பாக வள்ளியூா் ஏ.எஸ்.பி. சமய்சிங் மீனா கூறியது: திருட்டில் ஈடுபட்ட நபா்கள் பழைய இரும்பு வியாபாரத்திற்காக வீடு, வீடாக வந்து ஆள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டுள்ளனா். பொதுமக்கள் தங்களது வீடுகளின் முன்பு கண்டிப்பாக கண்காணிப்பு கேமரா பொருத்திவையுங்கள் இது உங்களுக்கும், சமூதாயத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றாா்.