திருநெல்வேலி

அம்பாசமுத்திரத்தில் விற்பனைக்காக குழந்தை கடத்தல்: 36 மணி நேரத்தில் மீட்ட காவல் துறையினர்

22nd Jun 2022 12:23 PM

ADVERTISEMENT

அம்பாசமுத்திரம்: பாப்பாக்குடியில் விற்பனைக்காக கடத்தப்பட்ட 6 மாதக் குழந்தையை 36 மணி நேரத்தில் காவல் துறையினர் மீட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம், கீழப்பாப்பாக்குடி வேத கோயில் தெருவைச் சேர்ந்த தம்பதி கார்த்திக் மற்றும் இசக்கியம்மாள். கூலித் தொழிலாளிகளான இவர்களுக்கு 6 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ஜூன் 20-ம் தேதி திங்கள்கிழமை அன்று குழந்தை காணவில்லை என்று பாப்பாக்குடி காவல் நிலையத்தில் இசக்கியம்மாள் புகாரளித்தார். இதையடுத்து காவல் துறையினர் விசாரணை செய்து 36 மணி நேரத்தில் குழந்தையை மீட்டனர்.

இது குறித்து அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரான்சிஸ் செய்தியாளர்களிடம் கூறியது:

ஜூன் 20-ம் தேதி குழந்தை காணவில்லை என்று இசக்கியம்மாள் புகாரளித்ததையடுத்து காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் காவல் ஆய்வாளர் சந்திரமோகன் மற்றும் எனது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடைபெற்றது. மேலும் கண்காணிப்பு காமிராக்கள் மற்றும் செல்பேசி உதவியுடன் புகாரளித்த 36 மணி நேரத்தில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு குழந்தை மீட்கப்பட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து குழந்தைக் கடத்தலில் ஈடுபட்டதாக தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஆலங்குளத்தைச் சேர்ந்த கணபதி மகன் கார்த்திகேயன் (34), கீழப்பாப்பாக்குடி பள்ளிக்கூடத்தெருவைச் சேர்ந்த முருகன் மனைவி கனியம்மாள் (57), ஜெகன் மனைவி முத்து செல்வி (30) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் பெற்றோர் தங்கள் குழந்தைகளை நன்கு அறிமுகமானவர்களிடம் கொடுத்தாலும் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT