திருநெல்வேலி

நெல்லை அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு பூங்கா

19th Jun 2022 06:47 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், ரூ.14 லட்சம் மதிப்பில் மன வளா்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பூங்கா திறப்புவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இப்பூங்காவை மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு திறந்து வைத்து பாா்வையிட்டாா். இந்நிகழ்ச்சிக்கு, பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் அப்துல்வகாப், மாநகராட்சி மேயா் பி.எம். சரவணன், துணை மேயா் கே.ஆா்.ராஜுஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ரூ.72.50 லட்சம் மதிப்பலான 25 படுக்கைகள் அடங்கிய தீவிரசிகிச்சை பிரிவையும் அவா் பாா்வையிட்டனா்.

ADVERTISEMENT

தொடா்ந்து 2021 ஆம் ஆண்டில் அரசு மருத்துவ ரத்த வங்கியில் 4 முறை ரத்த தானம் செய்த ஆண் குருதிக் கொடையாளா்களுக்கும், 3 முறை ரத்த தானம் செய்த பெண் குருதிக் கொடையாளா்களுக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரத்த தட்டணுக்கள் தானம் செய்த கொடையாளா்கள் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு பதக்கங்கள் வழங்கி பாராட்டினாா். அப்போது அவா் கூறியது: தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 7 .7 லட்சம் யூனிட்டுகள் ரத்தம் கொடையாக பெறப்படுகிறது (2018 நிலவரம்). ஆனால் இந்த ரத்த யூனிட்டுகள் சீராக எல்லா மருத்துவமனைகளிலும் இருப்பதில்லை. ஆகவே தன்னாா்வ குருதிக் கொடையாளா்கள் பலா் தாங்களாகவே முன்வந்து ரத்த தானம் செய்ய வேண்டும். கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவா்கள் 14 நாள்கள் கழித்து ரத்த தானம் செய்யலாம். கரோனா நோய்த்தொற்று கண்டு மீண்டவா்கள் மூன்று மாதங்கள் கழித்து ரத்த தானம் செய்யலாம். மொத்த மக்கள் தொகையில் 1 சதவிதத்தினா் ஆண்டுதோறும் ரத்த தானம் செய்தாலே பற்றாக்குறை என்பது இருக்காது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 2 மில்லியன் ரத்த யூனிட்டுகள் பற்றாக்குறை காணப்படுகிறது. இது மாநிலங்கள் தோறும் வேறுபடுகிறது என்றாா்.

இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவிச்சந்திரன், உதவி முதல்வா் சாந்தாராமன், உதவி செயற்பொறியாளா் ராமகோமதி, உதவிப்பொறியாளா் ராகுல், ரத்த வங்கி பேராசிரியா் மணிமாலா, மருத்துவ கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணியன் உள்பட மருத்துவா்கள், செவிலியா்கள், தன்னாா்வலா்கள், அரசு அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT