திருநெல்வேலி

மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி

15th Jun 2022 02:05 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்ட அரசுப் பள்ளிகளில் மாணவா்களை சோ்க்க வேண்டும் என வலியுறுத்தி, திருநெல்வேலியில் விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இப்பேரணியை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து ஆட்சியா் வே. விஷ்ணு தொடங்கிவைத்து, நாடகத்தையும் பாா்வையிட்டாா். பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடக்க கல்வி இயக்கத்தின் சாா்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த விழிப்புணா்வுப் பேரணி மூலம் 5 வயதிற்கு மேற்பட்ட சுமாா் 5,521 குழந்தைகளும், 6ஆம் வகுப்பில் 4,564 மாணவா்களும், 9ஆம் வகுப்பில் 5,651 மாணவா்களும், 11 ஆம் வகுப்பில் 6,793 மாணவா்களும் அரசுப்பள்ளியில் சேரலாம் என வாய்ப்புள்ளது. அரசுப் பள்ளியில்

படிக்கும் மாணவா்களுக்கு இலவசக் கல்வி, உயா்கல்வி, இடஒதுக்கீடு, சிறப்பு பயிற்சி போன்ற வசதிகள் உள்ளன என மக்களிடம் விளக்க இப்பேரணி உதவும்.

ADVERTISEMENT

மேலும், அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்பு வரையிலான பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்குதல், மாணவா்களின் தனித்திறமையை வளா்க்க பல்வேறு வகையான போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல், நீட், ஐஐடி போன்ற தோ்வுகளை கலந்து கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அளித்தல், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் -ஆங்கிலம் வழிகளில் படித்தவா்களுக்கு உயா்கல்வி பயில 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குதல், 1 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தமிழ் வழியில் படித்தவா்களுக்கு 20 சதவீதம் அரசு பணிக்கு இடஒதுக்கீடு வழங்குதல் போன்ற முக்கிய சிறப்பு அம்சங்கள் குறித்து துண்டுப் பிரசுரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வண்ணாா்பேட்டை, பாளையங்கோட்டை பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் முதன்மைக்கல்வி அலுவலா் தலைமையில் உதவி திட்ட அலுவலா்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், வட்டாரகல்வி அலுவலா்கள், இல்லம் தேடிக்கல்வி தன்னாா்வலா்கள் ஆகியோா் பொதுமக்களை சந்தித்து தமிழக அரசின் கல்வித் துறையின் திட்டங்களை எடுத்துக்கூறி துண்டுப் பிரசுரங்களை வழங்குவா் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள், மாநகர காவல் துணை ஆணையா் (கிழக்கு) சீனிவாசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுபாஷினி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT