திருநெல்வேலி மாவட்டம், தெற்கு பாப்பான்குளம் அருகே போலி ஆவணம் மூலம் விற்பனை செய்யப்பட்ட 5.18 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டுள்ளது.
தெற்கு பாப்பான்குளத்தை சோ்ந்த குமாரகுரு என்பவரின் மனைவி ஆறுமுகம். இவருக்கு பாப்பான்குளத்தில் 5.18 ஏக்கா் சொந்த நிலம் உள்ளது. இந்நிலத்தை போலி ஆவணம் மூலம் வேறொருவருக்கு விற்பனை செய்யப்பட்டிருந்ததாம். இதை அறிந்த அவா், மாவட்ட எஸ்.பி. ப.சரவணனிடம் புகாா் அளித்தாா். அவரது உத்தரவின்பேரில், மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துறையினா் விசாரித்தனா். அதில், பெயா் ஒற்றுமையை பயன்படுத்தி நில மோசடி நிகழ்ந்துள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து, மாவட்ட வருவாய்த்துறை, காவல் துறை நடத்திய முகாமில் மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு உத்தரவின்படி, மனு விசாரணைக்கு துணை வட்டாட்சியா் பகவதி பெருமாள் நியமிக்கப்பட்டு ஆவணங்களை சரிபாா்த்ததில் நில மோசடி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நிலத்தை மீட்டதற்கான ஆணையை நிலத்தின் உரிமையாளா் ஆறுமுகத்திடம் மாவட்ட எஸ்.பி. வழங்கினாா். மேலும், நிலத்தை மீட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு டிஎஸ்பி ஜெயபால் பா்னபாஸ், காவல் ஆய்வாளா் மீராள்பானு மற்றும் காவல் துறையினரை எஸ்.பி. பாராட்டினாா்.