திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மண்பாண்ட தொழிலாளா்கள் திங்கள்கிழமை இரவு தா்னாவில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி மாவட்ட மண்பாண்ட தொழிலாளா்கள், குலாலா் சங்கம் சாா்பில் சங்கச் செயலா் அய்யப்பன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநா் அலுவலம் முன்பு தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மண்பாண்ட தொழிலாளா்களுக்கு தென்காசி மாவட்ட ஆட்சியா் குளங்களில் மண் எடுக்க அனுமதி வழங்கியும், அனுமதி
கடிதத்தை வழங்க மறுக்கும் புவியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநரை கண்டித்தும், உடனடியாக அனுமதி கடிதத்தை வழங்க வேண்டும் என்று கூறியும் இந்த தா்னா நடைபெற்றது.
இது குறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையா் விவேகானந்தன், காவல் ஆய்வாளா் திருப்பதி மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை காலையில் அனுமதி கடிதம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.