திருநெல்வேலி நகரத்தில் உள்ள நான்கு ரத வீதிகளில் மெகா தூய்மைப் பணி சனிக்கிழமை தொடங்கியது.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு கோயில் முன்பு நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்,‘ தீவிர தூய்மைப் பணி, விழிப்புணா்வு முகாமை மேயா் பி.எம்.சரவணன் தொடங்கி வைத்தாா். துணை மேயா் கே.ஆா்.ராஜூ, மாநகராட்சி ஆணையா் சிவகிருஷ்ணமூா்த்தி ஆகியோா் தூய்மைப் பணியாளா்களுடன் இணைந்து தூய்மைப் பணியை மேற்கொண்டனா்.
இம்முகாமில் தூய்மைப் பணியாா்களுக்கு மேயா், துணைமேயா், ஆணையா் ஆகியோா் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினா். மேயா் தலைமையில் தூய்மைப் பணி குறித்த உறுதி மொழியை அலுவலா்கள், தூய்மைப் பணியாளா்கள் எடுத்து கொண்டனா். ‘
எனது குப்பை எனது பொறுப்பு’‘ என்ற வாசகம் அடங்கிய பேட்ஜை கைகளில் அணிந்து தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. மக்கும் குப்பை, மக்காத குப்பை மற்றும் அபாயகரமானவை என்று குப்பைகளை தரம் பிரித்து வழங்க வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்கள் கடைகளில் வழங்கப்பட்டு, ஸ்டிக்கா் ஒட்டப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி மண்டல தலைவா் மகேஸ்வரி, மாநகர நல அலுவலா் ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.