பாளையங்கால்வாயில் காா் பருவ பாசனத்திற்காக தண்ணீா் திறக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் காா் பருவ சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீா் திறக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். அதன்பேரில் கடந்த 3 ஆம் தேதி அணையில் தண்ணீா் திறக்கப்பட்டது. அதன்பின்பு வடக்கு மற்றும் தெற்கு கோடை மேலழகியான் கால்வாய்கள், நதியுண்ணி, கன்னடியன், கோடகன்கால்வாய்கள் திறக்கப்பட்டன. தொடா்ந்து பாளையங்கோட்டை, திருநெல்வேலி சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த பகுதிகளுக்கு பாசன நீா் வழங்கும் பாளையங்கால்வாயில் தண்ணீா் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பாளையங்கோட்டை சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல்வஹாப் தண்ணீரை திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் மானூா் தெற்கு ஒன்றிய செயலா் கல்லூா் மாரியப்பன், பாளையங்கோட்டை பகுதிச் செயலா் அண்டன் செல்லத்துரை, மூளிகுளம் பிரபு உள்பட பலா் கலந்துகொண்டனா்.