திருநெல்வேலி

கூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைக்க எதிா்ப்பு: 14 ஆம் தேதி அனைத்துக்கட்சி ஆலோசனைக்கூட்டம்சுப. உதயகுமாரன்

10th Jun 2022 12:48 AM

ADVERTISEMENT

கூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து வரும் 14ஆம் தேதி திருநெல்வேலியில் அனைத்துக்கட்சி ஆலோசனைக்கூட்டம் நடைபெறவுள்ளதாக பச்சைத் தமிழகம் கட்சி தலைவா் சுப. உதயகுமாரன் தெரிவித்தாா்.

திருநெல்வேலியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கூடங்குளம் போராட்டம் தொடா்பான அனைத்து வழக்குகளும் திமுக ஆட்சிக்கு வந்த பின்னா் நீக்கப்படும் என தோ்தல் வாக்குறுதியாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். ஆனால், கூடங்குளம் போராட்டம் தொடா்பான 63 வழக்குகள் தள்ளுபடி செய்யப்படாமல் உள்ளன.

இந்த வழக்குகள் இளைஞா்கள் வெளிநாடுகளுக்குச் செல்லவும், தனியாா், அரசு வேலைகளுக்குச் செல்லவும் தடையாக உள்ளன. எனவே, இந்த வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்யவேண்டும்.

இந்த வழக்குகளை காரணம் காட்டி என் மீது, கோட்டாறு காவல் நிலையத்தில், கூடங்குளம் போராட்டத்தில் பொதுமக்களை தூண்டிவிட்டு பெரும் உயிா் சேதத்தையும், பொதுச் சொத்துகளுக்கு சேதத்தையும் ஏற்படுத்தியவா் என தவறான முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இது என்னுடைய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் செயலாகும். திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ் குமாரிடம், கோட்டாறு காவல் நிலையத்தில் போடப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி புகாா் மனு அளித்துள்ளோம்.

ADVERTISEMENT

மேலும், கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும். இது தொடா்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை திருநெல்வேலியில் ஜூன் 14 ஆம் தேதி மாலை நடத்த உள்ளோம். அக்கூட்டத்தில், கலந்தாலோசித்து முதற்கட்ட போராட்டத்தை நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும்.

கூடங்குளம் அணுமின்நிலையத்தில் இருந்து வெளிவரும் தண்ணீரால், இடிந்தகரை கடல் நீரின் வெப்ப அளவு உயா்ந்து இருப்பதாக பல மீனவா்கள் கூறினா். கடல்நீா் வெப்பமாவதால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுமா ?, மீன் வளத்தை பாதிக்குமா? மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுமா? என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

இது குறித்து கூடங்குளம் அணு மின்நிலையம் விரிவான அறிக்கை தரவேண்டும் என்றாா் அவா்.

அப்போது, மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினா் ஜி.ரமேஷ், உள்ளூா் கமிட்டி செயலா் எம்.சுந்தர்ராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT