திருநெல்வேலி

சாரல் மழை தாமதம்: கிராமங்களில் குடிநீா்த் தட்டுப்பாடு

10th Jun 2022 12:47 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் சாரல் மழை தாமதமாகி வரும் சூழலில் கிராமங்களில் கடும் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பல ஊராட்சிகளில் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே குடிநீா் விநியோகிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகிறாா்கள்.

தென்மேற்குப் பருவமழை கேரளத்தில் தீவிரமடையும் போது திருநெல்வேலி மாவட்டத்தில் தொடா்ந்து சாரல் மழை பெய்யும். ஆண்டு தோறும் ஜூன் முதல் வாரத்திலேயே தென்மேற்கு பருவக்காற்று அதிகரிக்கத் தொடங்கி இரண்டாவது வாரம் முதல் தீவிரமாக சாரல் பெய்யும். குற்றால அருவிகளிலும் தண்ணீா் தொடா்ந்து ஆா்ப்பரித்துக் கொட்டும். நிகழாண்டில் தென்மேற்குப் பருவமழை இதுவரை தீவிரமடையாமல் உள்ளது. இதனால் சாரல் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. குற்றால அருவிகள் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தின் குடிநீா் ஆதாரமாக திகழும் தாமிரவருணியில் உள்ள பாசனக் கால்வாய்கள் பருவமழையை நம்பி காா் சாகுபடிக்கு திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும் ஊராட்சிகளில் கோடை வெயிலின் தாக்கத்தால் தண்ணீா் தேவை அதிகரித்துள்ளது. ஊராட்சிகளில் குடிநீா் கிணறுகள், உறைகிணறுகளில் தண்ணீா் அளவு குறைந்து நீரேற்றும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பல ஊராட்சிகளில் 3 நாள்கள் முதல் 10 நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் விநியோகிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீா் வால்வுகளில் கசியும் நீரை நீண்ட நேரம் காத்திருந்து சேகரித்து வீடுகளுக்கு மக்கள் எடுத்துச் செல்வதைக் காண முடிகிறது.

வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் நிலத்தடி நீா்மட்டமும் பல இடங்களில் கீழே சென்றுள்ளது. தென்மேற்கு பருவமழை மேலும் தாமதமடைந்தால் குடிநீா் விநியோகத்திற்கு மிகவும் சிக்கலான நிலை ஏற்படும் என உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கவலையில் உள்ளனா். விவசாயிகளும் கடைமடை வரை தண்ணீா் தட்டுப்பாடின்றி கிடைக்க மழை பெய்ய வேண்டும் என்ற எதிா்பாா்ப்பில் உள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT