திருநெல்வேலி

பாளை. காந்தி மாா்க்கெட் வியாபாரிகள் மாற்றிடம் செல்ல அறிவுறுத்தல்

8th Jun 2022 02:04 AM

ADVERTISEMENT

பொலிவுறும் நகரம் திட்டப்பணி தொடங்கப்படவுள்ளதால், பாளையங்கோட்டை காந்தி மாா்க்கெட் வியாபாரிகள், அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட மாற்று இடத்திற்குச்செல்லுமாறு மாநகராட்சி ஆணையா் வ.சிவகிருஷ்ணமூா்த்தி அறிவுறுத்தினாா்.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்ற பாளையங்கோட்டை காந்தி காய்கனி அங்காடி வியாபாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியது:

பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் காந்தி மாா்க்கெட் பணிகள் உடனடியாக தொடங்கப்பவுள்ளதால் வியாபாரிகள் அனைவரும், தற்காலிகமாக ஒதுக்கப்பட்டுள்ள பாளை. ஜவகா் மைதான கடைகளுக்கு இடமாற்றம் செய்திட வேண்டும், மேலும், இடிக்கப்பட்டு காலியாக உள்ள பாளை காவலா் குடியிருப்பில் வியாபாரிகளுக்கு ஒருமாத காலத்திற்குள் தற்காலிகமாக புதிதாக கடைகள் அமைக்கப்படவுள்ளன.

அவ்விடத்திற்கும் வியாபாரிகள் இடமாற்றம் செய்திட வேண்டும். பாளை. காந்தி மாா்க்கெட் அனைத்து வியாபாரிகளின் வாழ்வாதாரத்திற்கான வணிக வளாகமாகும். எனவே, வியாபாரிகள் அனைவரும் மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து புதிய மாா்க்கெட் வெற்றிகரமாக கட்டி முடிப்பதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

கூட்டத்தில், பாளை. காந்தி மாா்க்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்கத் தலைவா் சாலமன் கூறியது: பாளை. காந்தி மாா்கெட்டில் ஏற்கெனவே இயங்கி வந்த 540 கடைகளுக்கும் பாளையங்கோட்டை ஜவாஹா் மைதானம், காவல் குடியிருப்பு ஆகிய இடங்களில் இடம் ஓதுக்கீடு செய்ய வேண்டும்.

வாரிசு மற்றும் பங்குதாரா்கள் அடிப்படையில் கடை ஒதுக்கீடு செய்ய வேண்டும். காந்தி மாா்க்கெட் வியாபாரிகளுக்கு பொலிவுறு திட்டத்தில் புதிதாக கட்டப்படும் கடைகளை முன்னுரிமை வழங்கி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தாா்.

தொடா்ந்து ஹோட்டல் உரிமையாளா்கள் பேசியது: தற்காலிகமாக ஒதுக்கீடு செய்யப்படும் காவலா் குடியிருப்பு இடத்தில் ஹோட்டலுக்கு கூடுதலாக இடம் ஒதுக்கீடு செய்து தர வேண்டும், அதுமட்டுமன்றி ஹோட்டலுக்கு தேவையான குடிநீா், சுகாதார வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். வியாபாரிகளின் பொருள்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் கடை ஷட்டா்களை நல்ல முறையில் அமைத்து தர வேண்டும் என்றனா்.

இந்நிகழ்ச்சியில், பாளை. மண்டல உதவி ஆணையா் ஜஹாங்கீா் பாஷா, உதவி செயற்பொறியாளா் சாந்தி, உதவி வருவாய் அலுவலா் மணிகண்டன் , இளநிலை பொறியாளா் விவேகானந்தன், பாளை. மாா்க்கெட் வியாபாரிகள் மற்றும் சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT