முக்கூடலில் நன்னடத்தை பிணையில் வெளியே வந்த இளைஞா், பிணையை மீறி செயல்பட்டதால் அவருக்கு நீதிமன்றம் 10 மாதங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது.
முக்கூடல் அருகேயுள்ள வடக்கு அரியநாயகிபுரத்தைச் சோ்ந்த சீதாராமன் மகன் கணேசன் என்ற கட்ட கணேசன் (27). இவா் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக கைதாகி சிறையில் இருந்தாா். அவருக்கு ஒரு வருடத்துக்கு நன்னடத்தை பிணை வழங்கப்பட்டது. எனினும், கடந்த மே மாதம் 9 ஆம் தேதி நன்னடத்தை பிணையை மீறி கொலை முயற்சியில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து கணேசன் என்ற கட்ட கணேசன், நன்னடத்தை பிணையை மீறி செயல்பட்டதாக சுத்தமல்லி காவல் ஆய்வாளா் கோகிலா, சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் அறிக்கை சமா்ப்பித்தாா்.
இதையடுத்து, பிணையை மீறிய குற்றத்துக்காக கணேசன் என்ற கட்ட கணேசனுக்கு 10 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.