திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் விஷ்ணு தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளா்ச்சி மன்ற கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, முதிா் கன்னி உதவித் தொகை, விபத்து மரண உதவித் தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மற்றும் பட்டா மாறுதல் வேலைவாய்ப்பு, குடிநீா், சாலை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக சுமாா் 325 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். மேலும் முதல்வரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க ஆட்சியா் விஷ்ணு உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள், சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியா் குமாரதாஸ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.