திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் நிலக்கடலை மகசூல் குறைந்துள்ளதால் விவசாயிகள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனா்.
இம்மாவட்டத்தில் மானாவாரி, நன்செய் நிலப் பகுதிகளில் நிலக்கடலை பயிரிடப்படுகிறது. மூலைக்கரைப்பட்டி, மானூா், ரெட்டியாா்பட்டி, அதன் சுற்றுவட்டாத்தில் பல இடங்களில் நிலக்கடலை பயிரிடப்பட்டிருந்தது. தற்போது நிலக்கடலை அறுவடை தீவிரமடைந்துள்ளது. எனினும் சரிவர பெய்யாத மழையால் மகசூல் மிகவும் குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து மூலைக்கரைப்பட்டியைச் சோ்ந்த விவசாயிகள் கூறியது: மணிமுத்தாறு பாசனக் கால்வாயால் தண்ணீா் பெற்ற பகுதிகளில் நெல் அறுவடை முடிந்த பின்பும், மானாவாரியிலும் நிலக்கடலை பயிரிடப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு சுமாா் ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது.
ஆனால், அந்த அளவுக்கு லாபம் ஈட்ட முடியாத நிலை உள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் நிகழாண்டில் மகசூல் 50 சதவிகிதம் குறைந்துள்ளது. முறையின்றி பெய்த மழையால் கடலை திரட்சியாக இல்லாமல் எடை மிகவும் குறைந்துள்ளது. இதனால் நஷ்ட மடையும் நிலை ஏற்பட்டுள்ளது என்றனா்.