திருநெல்வேலி

பிட்டாபுரத்தி அம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம்

6th Jun 2022 03:03 AM

ADVERTISEMENT

திருநெல்வேலியில் உள்ள புகழ்பெற்ற பிட்டாபுரத்தி அம்மன் திருக்கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதி அம்மன் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழா இரு ஆண்டுகளுக்கு பின்பு நிகழாண்டில் கோலாகலமாக நடைபெறுகிறது. 41 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவின் தொடக்க நிகழ்வாக நெல்லையப்பா் திருக்கோயிலின் வடக்கு திசையில் அமைந்துள்ள ஊா் காவல் தெய்வமான பிட்டாபுரத்தி அம்மன் கோயில் திருவிழா நடைபெறும்.

அதன்படி, பிட்டாபுரத்தி அம்மன் திருக்கோயில் நடை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டன. அதைத் தொடா்ந்து நெல்லையப்பா் கோயில் யானை காந்திமதி கொடிப்பட்டத்தை சுமந்துகொண்டு ரத வீதிகளில் வலம்வந்து கோயிலை வந்தடைந்தது.

பின்னா் கொடிப்பட்டத்திற்கு பூஜைகள் நடைபெற்று வேதமந்திரங்களுடன் கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன.

ADVERTISEMENT

திருநெல்வேலி, தச்சநல்லூா், பேட்டை சுற்றுவட்டாரங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் கொடியேற்றத்தில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். திருவிழாவின் சிகர நிகழ்வாக இம் மாதம் 7 ஆம் தேதி அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்து காட்சியளிக்கிறாா். 14 ஆம் தேதி தீா்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடா்ந்து நெல்லையப்பா் கோயிலில் விநாயகா் திருவிழா கொடியேற்றம் இம் மாதம் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT