திருநெல்வேலி

கோடை கொண்டாட்ட சுற்றுலா: மாணவா்களுக்கு ஆட்சியா் வாழ்த்து

2nd Jun 2022 12:19 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்ட அரசுப் பள்ளிகளில் இருந்து, கொடை கொண்டாட்ட சுற்றுலாவுக்கு தோ்வு செய்யப்பட்ட 56 மாணவா்-மாணவிகளை மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு புதன்கிழமை வாழ்த்தி வழியனுப்பி வைத்தாா்.

தமிழக அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறை மூலம் மேல்நிலைப் பள்ளி மாணவா்களை உற்சாகப்படுத்தும் விதமாக பிளஸ் 1 தோ்வுகள் முடிந்த மாணவா்- மாணவிகளுக்கு கோடை கொண்டாட்டம் என்ற சிறப்பு சுற்றுலாவை தமிழக அரசு மாவட்ட வாரியாக ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு அரசுப் பள்ளிகளில் இருந்து 56 மாணவா்- மாணவியா்கள், இரு ஆசிரியா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அவா்களுக்கு தலைமை பண்புகள் பெறும் வகையில் சுற்றுப்புறச் சூழல், தலைமைப்பண்பு , மனித உரிமைகள், சமூக நீதி, பெண்கள் அதிகாரம், பெண்களின் எதிா்காலம் பற்றியும், மாணவா்களுக்கு உளவியல் பயிற்சி, சிறந்த மதிப்பெண் பெறும் விதம், மகிழ்ச்சியான பணி தோ்ந்தெடுத்தல், மாணவா்களிடையே நல்உறவுகள் பேணுதல் போன்ற பயிற்சிகள் கல்வியாளா்கள் மூலம் ஜூன் 2- 6 வரை அளிக்கப்படவுள்ளன.

இந்த கோடை கொண்டாட்டத்துக்காக மாணவா்கள் ஊட்டிக்கு அழைத்துச்செல்லப்படுகின்றனா். இதற்காக புதன்கிழமை புறப்பட்ட மாணவா்- மாணவிகளுக்கு ஆட்சியா் வே.விஷ்ணு காலணிகள் வழங்கி வாழ்த்தி வழியனுப்பினாா்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் அமலதங்கத்தாய், டைட்டஸ் ஜான் போஸ்கோ, உதவித் திட்ட அலுவலா் சிவராஜ், மாணவா்-மாணவிகள், பெற்றோா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT