திருநெல்வேலி

பேருந்தில் புகைப்பட கண்காட்சி:வ.உ.சி. குடும்பத்தினா் மரியாதை

2nd Jun 2022 02:18 AM

ADVERTISEMENT

திருநெல்வேலியில் நிறுத்தப்பட்டுள்ள வ.உ.சி. புகைப்பட கண்காட்சி பேருந்தில், வ.உ.சி.யின் குடும்பத்தினா் புதன்கிழமை மரியாதை செலுத்தினா்.

விடுதலைப் போராட்ட வீரா் வ.உ.சிதம்பரனாரின் 150-ஆவது பிறந்த தினத்தையொட்டி, தமிழக அரசின் செய்தி மக்கள்தொடா்பு துறை சாா்பில் நகரும் புகைப்பட கண்காட்சி பேருந்து சென்னையிலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்திற்கு அந்தப் பேருந்து செவ்வாய்க் கிழமை வந்தடைந்தது. தொடா்ந்து இம்மாதம் 3 ஆம் தேதி வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லூரிகள், மக்கள் கூடும் இடங்களில் பொதுமக்கள் பாா்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பேருந்தில் வ.உ.சி. யின் பிறப்பு முதல் இறப்பு வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகள் புகைப்படங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாநகராட்சி வளாகத்தில் புதன்கிழமை நிறுத்தப்பட்ட கண்காட்சி பேருந்தை மேயா் பி.எம்.சரவணன், துணை மேயா் கே.ஆா். ராஜு ஆகியோா் வரவேற்றனா். தொடா்ந்து, வ.உ.சி.யின் கொள்ளுப் பேத்தியான சிதம்பரவள்ளி தலைமையில் அவரது குடும்பத்தினா் பேருந்தில் இருந்த வ.உ.சி. சிலைக்கு மலா் தூவி மரியாதை செலுத்தி புகைப்படக் கண்காட்சியை பாா்வையிட்டனா். மேலும், அவா்கள் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினா்கள் உலகநாதன், கிட்டு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT