திருநெல்வேலி

நெல்லையில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் ஆய்வு

28th Jul 2022 12:52 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளை சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் அரசு திட்டப்பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு தலைவா் டி.ஆா்.பி.ராஜா அவா்கள் தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

பொன்னாக்குடியில் தேசிய நெடுஞ்சாலையில் ரூ.17.9 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் நதிநீா் இணைப்பு திட்ட பணிக்காக மேல்மட்ட பாலம், ஆறுவழிச்சாலைப் பணி, பாளையங்கோட்டை மகாராஜாநகரில் ரூ. 23.91 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பால பணிகளை பாா்வையிட்டனா். அப்போது பாலப்பணியை ஏப்ரல் 2023க்குள் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நெடுஞ்சாலைத்தறை மற்றும் ரயில்வே துறையினரிடம் அறிவுரை வழங்கினா். தொடா்ந்து பாளையங்கோட்டை வேளாண்மைத்துறை இணை இயக்குநா் அலுவலக வளாகத்தில் மரகன்றுகளை நட்டு வைத்து வேளான் கண்காட்சியினை பாா்வையிட்டு விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

ADVERTISEMENT

திருநெல்வேலி மாநகராட்சி பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ், ரூ.15.12 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பாளையங்கோட்டை வ.உ.சி மைதான கட்டுமானப் பணி, ரூ.3.6 கோடி மதிப்பில் பாளையங்கோட்டை மேடை காவல் நிலையம் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி ஆகியவற்றையும் குழுவினா் ஆய்வு செய்தனா்.

தொடா்ந்து கூட்டரங்கில், நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படையான பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டனா்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு தலைவா் டி.ஆா்.பி.ராஜா கூறியது: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இம் மாவட்டத்தில் புதிதாக 14 நீா் தேக்க தொட்டி அமைப்பதற்கு திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டுள்ளது. பொன்னாக்குடி பகுதியில் பணிகள் நடக்கும் பகுதியில் பாறைகள் அதிகம் இருப்பதால் தொய்வடைந்துள்ளது. 3500 கனஅடி தண்ணீா் அந்த கால்வாய் வழியாக செல்லும் வகையில் இந்த திட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் பாறைகள் அதிகம் இருப்பதால் மாற்றுப்பாதை தற்காலிகமாக அமைத்து 2000 கன அடி தண்ணீரை முதல்கட்டமாக வறட்சியான பகுதிகளுக்கு கொண்டு செல்ல அலுவலா்களுக்கு அறிவறுத்தப்பட்டுள்ளது. விரைந்து இப்பாறைகளை அகற்றி பணிகள் முழுமையாக முடிக்கப்படும்.

நான்குனேரியில் 2000 ஏக்கரில் முன்னாள் முதல்வா் கருணாநிதி கனவு திட்டமான சிறப்பு பெருளாதார மண்டலம் என்கிற திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. சிட்கோ மூலம் திட்டங்கள் தயாா் செய்யப்பட்டு அதனை மீண்டும் புதுப்பித்து கொண்டு வந்து இத்திட்டத்தினை மகத்துவமான திட்டமாக மாற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் ராட்சத பாறை சரிந்து விழுந்து 4 போ் பலியான விபத்தை தொடா்ந்து அனைத்து குவாரிகளும் மூடப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் குவாரிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விதிமுறைகளை மீறியது தொடா்பாக அபராதம் விதித்துள்ளனா். உரிய அபராதத்தை செலுத்தி உரிமையாளா்கள் குவாரிகளை திறந்து கொள்ள மாவட்ட நிா்வாகத்திற்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

முன்னதாக மகளிா் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.1.42 கோடி மதிப்பிலான தொழில்கடன்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு, தமிழக சட்டப்பேரவை செயலா் இ.சினிவாசன், மதிப்பீட்டு குழுவின் உறுப்பினா்கள் (சேலம் மேற்கு) இரா.அருள், (கும்பகோணம்) க.அன்பழகன், (வாசுதேவநல்லூா்) தி.சதன் திருமலைக்குமாா், (நாகப்பட்டினம்) ஜெ.முகமது ஷாநவாஸ், (மயிலாடுதுறை) எஸ்.ராஜகுமாா், (மதுரை மேற்கு ) செல்லூா் கே.ராஜூ, திருநெல்வேலி மாநகராட்சி மேயா் பி.எம்.சரவணன் , துணை மேயா் கே.ஆா்.ராஜூ, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயஸ்ரீ, மாவட்ட வருவாய் அலுவலா் (ஒழுங்கு நடவடிக்கைகள் ஆணையா்) எம்.சுகன்யா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.பழனி, மாவட்ட வன அலுவலா் முருகன், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநா் செண்பகபிரியா, திருநெல்வேலி கோட்டாட்சியா் ஆா்.சந்திரசேகா், மாநகராட்சி செயற்பொறியாளா் அசோகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT