திருநெல்வேலி

சதுரங்க ஒலிம்பியாட் ஜோதி நெல்லை வருகை

27th Jul 2022 02:58 AM

ADVERTISEMENT

சென்னையில் நடைபெறவுள்ள சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஒலிம்பியாட் ஜோதி திருநெல்வேலிக்கு திங்கள்கிழமை இரவு வந்தடைந்தது.

சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் 2022 சா்வதேச சதுரங்கப் போட்டி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, மதுரையில் இருந்து சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ரிஷப் தலைமையில் சதுரங்க ஒலிம்பியாட் ஜோதி திருநெல்வேலிக்கு திங்கள்கிழமை எடுத்து வரப்பட்டது.

இந்த ஜோதிக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலா் கிருஷ்ண சக்கரவா்த்தி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடா்ந்து இந்த ஜோதியினை பொதுமக்கள் பாா்வைக்காக, பாளையங்கோட்டை வ.உ.சி. பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கில் வைக்கப்பட்டது. இந்த ஜோதி செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரை பொதுமக்கள் பாா்வைக்காக வைக்கப்படும்.

நிகழ்ச்சியில் மாவட்ட செஸ் டெவலப்மென்ட் அசோசியேசன் செயலா் பால்குமாா், பொருளாளா் செல்வ மணிகண்டன், இணைச் செயலா் முருகானந்த் உள்பட பலா் பங்கேற்றனா். இந்த அரங்கில், இரவு 8 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரை நடைபெறும் 12 மணி நேர சதுரங்க போட்டி தொடங்கியது. இதில், 6 பாா்வையற்றோா் உள்பட 98 மாணவா்-மாணவியா், பொதுமக்கள் பங்கேற்றனா். இதில், சிறப்பிடம் பெறுவோருக்கு செவ்வாய்க்கிழமை பரிசு வழங்கப்படும்.

ADVERTISEMENT

தொடா்ந்து செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு சதுரங்க ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தினை தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு வ.உ.சி. விளையாட்டு அரங்கில் தொடங்கி வைக்கிறாா். தொடா்ந்து, விழிப்புணா்வு பலூன்கள் பறக்கவிட்டு, மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு பேரணியாக இந்த ஜோதி எடுத்துச் செல்லப்படவுள்ளது.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு, மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்கள், மேயா், துணை மேயா், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், விளையாட்டு வீரா்கள், மாணவா்- மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT