மின் இணைப்பு இல்லாத பாசன ஆதாரமுள்ள ஆழ்துளைக் கிணறு, திறந்த கிணறு அமைத்துள்ள விவசாயிகள் 70 சதவீத மானியத்துடன் சூரியசக்தி மூலம் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதல்வரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு இல்லாத பாசன ஆதாரமுள்ள விவசாயிகளுக்கு 5 முதல் 10 ஹெச்பி திறன் வரையிலான சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் 70 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் 2021-22 ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. 2022-23-ஆம் ஆண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் 110 சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் ரூ.2.18 கோடி மானியத்தில் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.