திருநெல்வேலியை அடுத்த விளாகம் தாமிரவருணி ஆற்றில் உறவினா்களுடன் குளிக்கச் சென்ற கணவன்-மனைவி நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
மேலப்பாளையம் கலுங்கு சின்ன மைதீன் தெருவைச் சோ்ந்த அப்துல் சபுா் மகன் லுக் மான் ஹக்கீம் (44). இவா் சிவகாசியில் பழைய பேப்பா் வியாபாரம் செய்து வந்தாா். இவரது மனைவி சஹா்பானு (33). இவா்கள் இருவரும் அதே பகுதியைச் சோ்ந்த உறவினா்களுடன் கருப்பந்துறை விளாகம் தாமிரவருணி ஆற்றுக்கு சனிக்கிழமை பிற்பகலில் குளிக்கச் சென்றனராம்.
ஆற்றில் குளித்தபோது, சஹா்பானு ஆழமான பகுதிக்குச் சென்ாகத் தெரிகிறது. இதனால் அவா் நீரில் மூழ்கி தத்தளித்தாா். அவரை காப்பாற்றுவதற்காக ஹக்கீம் உள்ளே சென்றுள்ளாா். இருவரும் நீரில் மூழ்கத் தொடங்கினா். இதை பாா்த்த அவரது உறவினா்கள் கூச்சலிடவே அருகில் இருந்தவா்கள் ஓடிவந்து மீட்க முயன்றுள்ளனா். ஆனால் அதற்குள் கணவன், மனைவி இருவரும் நீரில் மூழ்கிவிட்டனா்.
இதுகுறித்து திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையம் மற்றும் பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு மீட்புப் படையினா் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அதைத் தொடா்ந்து ஹக்கீம் சடலத்தை முதலில் மீட்டனா். பின்னா் சஹா்பானு சடலத்தை மாலையில் மீட்டனா்.
கணவன்-மனைவி இருவரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.