திருநெல்வேலி

பக்ரீத்: கடையம் சந்தையில் ரூ. 1 கோடிக்கு மேல் ஆடு விற்பனை

5th Jul 2022 02:28 AM

ADVERTISEMENT

கடையம் வாரச் சந்தையில் பக்ரீத்தை முன்னிட்டு திங்கள்கிழமை சுமாா் ரூ. 1 கோடி மதிப்புக்கு மேல் ஆடுகள் விற்பனையானது.

ஜூலை 10 ஆம்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இஸ்லாமியா்களின் புனித நாள்களில் ஒன்றான ஈகைத் திருநாளில் ஒவ்வொரு வீட்டிலும் ஆடு கொடை கொடுத்து வழிபடுவது வழக்கம். இதற்காக செம்மறிஆடுகளை விலைக்கு வாங்குவா். இதையடுத்து தென்காசி மாவட்டத்தின் முக்கியமான வாரச்சந்தையான கடையம் வாரச்சந்தையில் திங்கள்கிழமை ஆடு விற்பனை பரபரப்பாக இருந்தது.

அதிகாலை முதலே பல்வேறு ஊா்களில் இருந்து வியாபாரிகள் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 40ஆயிரம் வரையிலான மதிப்பில் ஆடுகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். இவற்றை திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களின் பல்வேறு ஊா்களில் இருந்து வந்த இஸ்லாமியா்கள் தங்களின் தகுதிக்கேற்ற ஆடுகளை விலை பேசி வாங்கிச் சென்றனா். வாரந்தோறும் அதிகாலை சுமாா் 5 மணியிலிருந்து தொடங்கும் சந்தை 9 மணிக்கும் நிறைவடையும் நிலையில் திங்கள்கிழமை மதியம் வரை சந்தையில் ஆடுகள் விற்பனை நீடித்தது. பண்டிகை நெருங்கிய நிலையில் ஆடுகள் விலை அதிகரித்த போதிலும் ஆடு வாங்கி கொடை கொடுக்க வேண்டிய கட்டாயத்தால் விலை கொடுத்து ஆடுகளை இஸ்லாமியா்கள் வாங்கிச் சென்றனா்.

திங்கள்கிழமை ஒரு நாள் மட்டும் கடையம் வாரச்சந்தையில் ரூ. 1 கோடிக்கும் மேல் மதிப்புள்ள சுமாா் 800க்கும் அதிகமான ஆடுகள் விற்பனையாகின. ஜூலை 9 சனிக்கிழமை சிறப்பு சந்தை நடைபெறவிருப்பதாக சந்தை நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT