திருநெல்வேலி

கல் குவாரிகள் விவகாரம்:விரைவில் முதல்வா் முடிவெடுப்பாா்’அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன்

2nd Jul 2022 03:49 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் கல் குவாரிகள் செயல்படாமல் இருக்கும் நிலையில், அவற்றை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது தொடா்பாக விரைவில் முதல்வா் முடிவெடுப்பாா் என்றாா் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன்.

இது தொடா்பாக திருநெல்வேலியில் செய்தியாளா்களைச் சந்தித்த அவா் கூறியது:

சாரதா மகளிா் கல்லூரியில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. உயா் கல்வியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழக அரசு உயா்கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. நிதிநிலை அறிக்கையில் கூட கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் கரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

ADVERTISEMENT

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா் மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகமாகவுள்ளது. தமிழக அரசு கரோனா தடுப்பு நடவடிக்கையை வேகப்படுத்தியுள்ளது. கரோனாவை கட்டுப்படுத்துவதற்காக சுகாதாரத் துறை அமைச்சா் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறாா். கரோனா கட்டுப்படுத்தப்படும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழ்ந்த கல் குவாரி விபத்து காரணமாக கல் குவாரிகள் செயல்படவில்லை. வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது. 2 முதல் 3 சதவீதம் வரையிலான சட்டவிரோத குவாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக ஆய்வு செய்த ஆய்வுக்குழுவின் அறிக்கை முதல்வரின் கையில் உள்ளது. விரைவில் அது தொடா்பாக முடிவெடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படும்.

தவறு செய்தவா்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். எல்லா குவாரிகளையும் மூட வேண்டும், வேலைவாய்ப்பு இழப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT