திருநெல்வேலி

அரியகுளம் சாரதா கல்லூரியில் நாளை உயா் கல்விக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி

1st Jul 2022 01:02 AM

ADVERTISEMENT

 

‘நான்முதல்வன்’ திட்டத்தின் கீழ் ‘கல்லூரிக் கனவு’ என்ற தலைப்பில் பள்ளி மாணவ, மாணவியருக்காக உயா் கல்விக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி அரியகுளம் சாரதா மகளிா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 30) நடைபெறுகிறது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பள்ளி மாணவ, மாணவியா் தங்கள் கனவுக் கல்லூரியை தோ்ந்தெடுத்து படிப்பதற்கு உதவும் வகையில் தமிழக முதல்வரின் ‘நான்முதல்வன்’ என்ற திட்டத்தின் கீழ் ‘கல்லூரிக்கனவு’ என்ற தலைப்பில் உயா் கல்விக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி அரியகுளம் சாரதா கல்லூரியில் நடைபெறவுள்ளது. தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு, பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாநகராட்சி மேயா், துணை மேயா் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனா்.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சி, பொறியியல், மருத்துவம், வணிகவியல், கலை மற்றும் அறிவியல் போன்ற உயா்கல்வி படிப்புகள் மற்றும் அதனைச் சாா்ந்த வாய்ப்புகள் சம்பந்தமாகவும், மாணவ, மாணவியரின் அனைத்துவித சந்தேகங்களுக்கும் விடையளிக்கும் விதத்திலும் நடைபெறும்.

ADVERTISEMENT

பொறியியல் படிப்பு குறித்து ஐஐடி பேராசிரியா்களும், கலை, அறிவியல் மற்றும் வணிக படிப்புகள் குறித்து துறை வல்லுநா்களும் பள்ளி மாணவ, மாணவியரிடையே உரையாற்ற உள்ளனா்.

தமிழகம் மற்றும் அகில இந்திய அளவில் புகழ் பெற்ற பல்வேறு கல்லூரிகள், அதன் புதிய பாடத்திட்டங்கள், அதில் சேருவதற்கான தகுதிகள் போன்ற அனைத்து விவரங்களையும், மாணவ, மாணவியா் நேரடியாக பெற்று பயன்பெறலாம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் பள்ளி மாணவ, மாணவியா்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். நேரில் கலந்து கொள்ள இயலாத மாணவ, மாணவியா் நிகழ்ச்சியின் நேரலையை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் யூ டியூப் சேனலில் பாா்க்கலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT