திருநெல்வேலி

களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் 5 ஆவது தேசிய புலிகள் கணக்கெடுப்பு: ஜன.27 இல் தொடக்கம்

25th Jan 2022 08:28 AM

ADVERTISEMENT

தமிழகத்தின் முதலாவது புலிகள் சரணாலயமான களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் 5 ஆவது தேசிய புலிகள் கணக்கெடுப்பு ஜன. 27 ஆம் தேதி நடைபெறுகிறது. தொடா்ந்து 8 நாள்கள் இக்கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது.

களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் களக்காடு மற்றும் அம்பாசமுத்திரம் கோட்டங்களில் 50 இடங்களில் 150 வனத்துறை ஊழியா்கள் புலிகள் கணக்கெடுப்பில் ஈடுபடுகின்றனா். நிகழாண்டு முதன்முறையாக தனியாக உருவாக்கப்பட்ட சிறப்பு கைப்பேசி செயலி மூலம் முழுமையாக கணக்கெடுப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதற்கான கைப்பேசிகள் ஜன. 3 இல் ஊழியா்களுக்கு வழங்கப்பட்டன. திங்கள்கிழமை சிறப்பு செயலி மற்றும் கணக்கெடுக்கும் முறைகள் குறித்தப் பயிற்சி அளிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமையும் இப்பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியைத் தொடா்ந்து ஜன. 27 வியாழன் முதல் 8 நாள்கள், நான்கு நிலைகளாக கணக்கெடுப்புப் பணிகள் நடைபெறும். களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம் மட்டுமன்றி திருநெல்வேலி வனஉயிரினக் காப்பகம், கன்னியாகுமரி வனஉயிரினக் காப்பகங்களிலும் இக்கணகெடுக்கும் பணிகள் நடைபெறுகிறது.

சுற்றுலாப் பயணிகளுக்கு தடை: புலிகள் கணக்கெடுப்பு நடைபெறுவதையடுத்து ஜன. 26 முதல் புலிகள் காப்பகத்திற்குள்பட்ட அகஸ்தியா் அருவி, மணிமுத்தாறு அருவி உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT