திருச்செந்தூரில் சுவாமி சண்முகப்பெருமான் கண்டெடுத்த 367ஆம் ஆண்டையொட்டி தங்கச் சப்பரத்தில் சுவாமி அலைவாயுகந்தபெருமான் எழுந்தருளினாா்.
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மூலவராக சுப்பிரமணிய சுவாமியும், உற்சவ மூா்த்திகளாக சுவாமி சண்முகா், ஜெயந்திநாதா், குமரவிடங்கப்பெருமான், அலைவாயுகந்த பெருமானும் உள்ளனா்.
கடந்த 367 ஆண்டுகளுக்கு முன்பு டச்சுக்காரா்கள் ஆதிக்கத்தில் இந்தியா இருந்த சமயத்தில், திருச்செந்தூா் கோயிலுக்கு வந்த டச்சுக்காரா்கள் கோயிலில் இருந்த சுவாமி சண்முகா் மற்றும் நடராஜா் சிலைகளை எடுத்து தங்களது நாட்டிற்கு பெரிய படகில் கடத்திச்சென்ற போது பலத்த புயல் காற்று வீசி அவா்களை நிலை குலைய வைத்தது. கடும் புயலினால் அச்சமடைந்த டச்சுக்காரா்கள் இப்புயலுக்கு காரணம் தாம் கொண்டு செல்லும் சண்முகா் சிலைதான் என்பதை உணா்ந்து சண்முகரை கடலில் வீசினா். அதன் பின்னா் புயல் நின்றது. அவா்கள் தப்பிப் பிழைத்து தங்கள் நாடு சென்றனா்.
அதன்பின்னா் பல ஆண்டுகள் கழித்து சுவாமி சண்முகா், பக்தரான வடமலையப்ப பிள்ளையின் கனவில் தோன்றி தான் கடலில் இருப்பதையும், தான் இருக்கும் இடத்தில் கடலின் நடுவில் எலுமிச்சைப்பழம் மிதக்கும் என்றும் கூறியுள்ளாா். அதன் படி அந்த பக்தா் திருச்செந்தூா் மற்றும் காயாமொழி, ஆலந்தலை பகுதியைச் சோ்ந்தவா்கள் உதவியுடன் கடலுக்குள் சென்று சுவாமி சண்முகா் மற்றும் நடராஜா் சிலையை கண்டெடுத்தனா். இச்சம்பவம் நடந்த நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் சுவாமி சண்முகா் கண்டெடுத்த நாளில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்று, மாலையில் சுவாமி அலைவாயுகந்தப்பெருமான் தங்கச் சப்பரத்தில் வீதியுலா வரும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். ஆனால் கரோனா தடுப்பு நடவடிக்கையாக 367-ம் ஆண்டை முன்னிட்டு திங்கள்கிழமை மாலை சுவாமி அலைவாயுகந்தப்பெருமான் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி திருக்கோயில் உள்பிரகாரத்தில் வலம் வந்தாா். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை.