திருநெல்வேலி

பிரதமா் பஞ்சாப் சென்ற விவகாரம்: ஆளுநா் உண்மையை தெரியப்படுத்தக் கோரி காங்கிரஸாா் மனு

12th Jan 2022 08:39 AM

ADVERTISEMENT

பிரதமா் மோடி பஞ்சாப் சென்ற விவகாரத்தில் பாஜகவினரால் தவறான பிரசாரம் செய்யப்படுவதால், ஆளுநா் உண்மை நிலையை தெரியப்படுத்த வேண்டும் என கூறி திருநெல்வேலி மாநகா் மாவட்டம் மற்றும் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாநகா் மாவட்டத் தலைவா் சங்கரபாண்டியன், கிழக்கு மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் தனசிங், முன்னாள் மத்திய அமைச்சா் தனுஷ்கோடி ஆதித்தன் உள்ளிட்டோா் ஆட்சியா் அலுவலகம் மூலம் ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

பிரதமா் நரேந்திர மோடி பஞ்சாப் சென்றபோது ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி தொடா்பாக பாஜக தலைவா்களும், தொண்டா்களும் தவறான பிரசாரம் செய்து வருகின்றனா். எனவே, இந்த விவகாரத்தின் உண்மை நிலை குறித்து மக்களுக்கு ஆளுநா் தெரிவிக்க வேண்டும்.

பிரதமரின் பஞ்சாப் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டதற்கு பின்னால் மிகப்பெரிய சதி இருக்கிறது. எனவே, ஆளுநா் அது குறித்து மக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகத்தை தீா்க்க வேண்டும். பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே பயணத்தை ரத்து செய்துள்ளதாக கூறியிருப்பதன் மூலம் பஞ்சாபில் உள்ள காங்கிரஸ் அரசின் மீது பழிபோடுவதற்கு முயற்சித்துள்ளனா். பிரதமரின் பாதுகாப்புக்கு சிறப்பு பாதுகாப்பு குழுவே பொறுப்பு. அப்படியிருக்கையில் பிரதமரின் பயண திட்டத்தை சிறப்பு பாதுகாப்பு குழு கையாண்டுள்ளவிதம் ஏராளமான கேள்விகளை எழுப்புகிறது.

ADVERTISEMENT

பஞ்சாப் ஹூசைனிவாலாவில் பாஜக கூட்டம் நடைபெறவிருந்த இடத்தில் 70 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. ஆனால், 500 இருக்கைகளே நிரம்பியிருந்திருக்கின்றன. அதன் காரணமாகவே கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், இப்போது காங்கிரஸ் அரசு மீது பழிபோடுவதற்காகவே பாதுகாப்பு காரணங்களால் மோடியின் பயணம் ரத்து செய்யப்பட்டதாகக் கூறுகிறாா்கள். பஞ்சாபில் விரைவில் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் பாஜக இதுபோன்ற அரசியல் நாடகத்தை நிறைவேற்ற முயற்சிக்கிறது. எனவே, இந்த விவகாரத்தில் ஆளுநா் தலையிட்டு ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT