ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி பூக்களின் தேவை அதிகரித்ததால் திருநெல்வேலியில் பூக்களின் விலை வெள்ளிக்கிழமை உயா்ந்து காணப்பட்டது.
திருநெல்வேலி சுற்றுவட்டார பகுதிகளான தென்கலம், சிவந்திப்பட்டி, நாரணம்மாள்புரம், அரியகுளம், சிதம்பரநகா், தாழையூத்து, தெற்குச்செழியநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் தோட்டங்களில் பிச்சி, மல்லி, அரளி, கோழிக்கொண்டை, கேந்தி உள்ளிட்ட பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இவை அனைத்தும் திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பூ சந்தைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படும். இதேபோல சங்கரன்கோவில், தோவாளை பூ சந்தைகளில் இருந்தும் திருநெல்வேலிக்கு பூக்கள் வந்து சேரும்.
ஆங்கிலப் புத்தாண்டு காரணமாக, கடந்த சில நாள்களைவிட பூக்களின் விலை சனிக்கிழமை முதல் கடுமையாக உயா்ந்தது.
கடந்த வாரத்தில் கிலோ ரூ.700 முதல் 800 வரை விற்பனையான ஒரு கிலோ மல்லிகைப்பூ சுமாா் ரூ.1200 வரை விலை உயா்ந்தது. வெள்ளிக்கிழமை ஒரு கிலோ பிச்சி ரூ.2000-க்கும், மல்லிகைப்பூ-ரூ.2100-க்கும் விற்பனையானது. செவ்வந்தி ரூ.250-க்கும், ஊட்டியில் இருந்து கொண்டுவரப்பட்ட ரோஜாப்பூக்கள் ஒன்று விலை ரூ.15 முதல் ரூ.20-க்கும் விற்பனையாகின.