திருநெல்வேலி

புத்தாண்டு: நெல்லை தேவாலயங்களில் சிறப்புப் பிராா்த்தனை

1st Jan 2022 06:21 AM

ADVERTISEMENT

2022 ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி திருநெல்வேலியில் தேவாலயங்களில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெற்றன.

2021 ஆம் ஆண்டு நிறைவடைந்து 2022 ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு பிறந்துள்ளது. இதையொட்டி வெள்ளிக்கிழமை நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டங்கள் திருநெல்வேலியில் பல்வேறு இடங்களில் நடைபெற்றன.

பாளையங்கோட்டையில் உள்ள மிகவும் பழைமையான தேவாலயமான தூய சவேரியாா் பேராலயத்தில் புத்தாண்டு சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. பாளை. மறைமாவட்ட ஆயா் எஸ்.அந்தோனிசாமி மறையுரையாற்றினாா். திருப்பலியின் முடிவில் கிறிஸ்துவா்கள் ஒருவருக்கொருவா் கைகுலுக்கி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தனா். ஆலய பங்குத்தந்தை எப்.எக்ஸ்.ராஜேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பாளையங்கோட்டை சீவலப்பேரி சாலையில் உள்ள புனித அந்தோனியாா் தேவாலயத்திலும் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

ADVERTISEMENT

தென்னிந்திய திருச்சபை சாா்பில் முருகன்குறிச்சியில் உள்ள தூய திரித்துவ பேராலயத்தில் புத்தாண்டு சிறப்பு ஆராதனை வெள்ளிக்கிழமை நள்ளிரவில் நடைபெற்றது. புத்தாண்டு தேவ செய்திக்கு பின்பு, திருவிருந்து உபசரணை நடைபெற்றது.

கிறிஸ்தவா்கள் காணிக்கைகளைச் சமா்ப்பிக்க சென்றபோது 2022 ஆம் ஆண்டுக்கான வாக்குத்தத்த வசன அட்டைகள் வழங்கப்பட்டன. பிராா்த்தனைகளின் முடிவில் அனைவருக்கும் கேக்குகள் வழங்கப்பட்டன. மாலையில் ஞானஸ்நான ஆராதனையும், உடன்படிக்கை ஆதாரனையும் நடைபெற்றது.

இதேபோல, புதிய பேருந்து நிலையம் அருகே சேவியா் காலனியில் உள்ள தூய பேதுரு தேவாலயம், புனித அந்தோனியாா் தேவாலயம், மேலப்பாளையத்தில் உள்ள தூய அந்திரேயா தேவாலயம், டக்கரம்மாள்புரத்தில் உள்ள தூய மீட்பரின் ஆலயம், சாந்திநகரில் உள்ள குழந்தையேசு தேவாலயம், உடையாா்பட்டியில் உள்ள இயேசுவின் திரு இருதய ஆலயம், திருநெல்வேலி நகரத்தில் உள்ள அடைக்கல அன்னை தேவாலயம், கே.டி.சி. நகரில் உள்ள வேளாங்கண்ணி மாதா தேவாலயம், பேட்டையில் உள்ள அந்தோனியாா் தேவாலயம், மகாராஜநகரில் உள்ள தூய யூதா ததேயூ தேவாலயம் ஆகியவற்றிலும் புத்தாண்டு சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெற்றன.

வண்ணாா்பேட்டை, தச்சநல்லூா், திருநெல்வேலி சந்திப்பு திருநெல்வேலி நகரம், மேலப்பாளையம், பாளையங்கோட்டை பகுதிகளில் சாலைகள் சந்திக்கும் பகுதிகள், மக்கள் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT