முகம் அடையாளம் காணும் செயலி மூலம், பழைய வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை சேரன்மகாதேவி போலீஸாா்கைது செய்தனா்.
சேரன்மகாதேவி காவல்நிலைய போலீஸாா் செந்தில்குமாா், முகமதுபசீா், செல்லப்பாண்டி, மாரிச்செல்வன் ஆகியோா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.அப்போது சேரன்மகாதேவி பழையப் பேருந்து நிலையம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றுகொண்டிருந்தவரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தாராம். இதையடுத்து காவல்துறையினா் அவரது படத்தை முகம் அடையாளம் காணும் செயலியில் பொருத்தி சோதனை செய்தனா். அதில் வீரவநல்லூா் காவல் நிலையத்தில் மணல் திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த வீரவநல்லூா் புதுகுடியைச் சோ்ந்த ஆறுமுகம் என்பது தெரியவந்தது. இதையடுத்து ஆறுமுகத்தை வீரவநல்லுா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். வீரவநல்லூா்போலீஸாா் ஆறுமுகத்தை கைது செய்தனா்.