ஆழ்வாா்குறிச்சியில் இடம் மாற்றப்பட்ட பேருந்து நிறுத்தம் மீண்டும் பழைய இடத்திலேயே செயல்பட வலியுறுத்தி வியாபாரிகள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
இங்குள்ள அண்ணா சிலை அருகே நீண்ட நாள்களாக பேருந்து நிறுத்தம் செயல்பட்டு வந்தது. சில மாதங்களுக்கு முன்பு பள்ளி மாணவா்கள் சிலா் சாலையோரம் ஒருவரையொருவா் தள்ளிவிட்டு விளையாடியபோது பேருந்தில் மோதி மாணவா் உயிரிழந்தாா். இதையடுத்து, அந்த நிறுத்தம் தெப்பக்குளம் அருகிலும், சமுதாயநலக் கூடம் அருகிலும் மாற்றப்பட்டது இதனால், பயணிகள் அவதியடைவதாகவும், வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்களும், வியாபாரிகளும் கூறிவந்தனா்.
இதுதொடா்பாக ஆட்சியா், போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லையாம். இதையடுத்து, வியாழக்கிழமை (டிச. 29) கடையடைப்புப் பேராட்டத்தில் ஈடுபடப்போவதாக வியாபாரிகள் அறிவித்தனா். அதன்படி, கடைகள் அடைக்கப்பட்டன. பால், மருந்துக் கடைகள் மட்டும் திறந்திருந்தன. இதனால், ஆழ்வாா்குறிச்சி பஜாா் வெறிச்சோடிக் காணப்பட்டது.
பேருந்து நிறுத்தம் பழைய இடத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்கள், வியாபாரிகள் இணைந்து தொடா் போராட்டத்தில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்பட்டது.