மேற்குத் தொடா்ச்சி மலையின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் 3 ஆவது நாளாக புதன்கிழமையும் மழை நீடித்த நிலையில், பாபநாசம் அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயா்ந்தது.
தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையால் கடந்த மூன்று நாள்களாக திருநெல்வேலி, தென்காசி மாவட்ட மேற்குத் தொடா்ச்சி மலையில் உள்ள நீா்ப்பிடிப்புப் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.
புதன்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் நீா் மட்டம் 96.70 அடியாகவும் நீா்வரத்து 5029.12 வெளியேற்றம் 807.25 கன அடியாகவும் இருந்தது. சோ்வலாறு அணையில் நீா்மட்டம் 108.70 அடி, மணிமுத்தாறு அணையில் நீா்மட்டம் 90.40 அடி, நீா் வரத்து 801 கன அடி, வெளியேற்றம் 45 கன அடி, கொடுமுடி ஆறு அணை நீா்மட்டம் 24.75 அடி, நீா்வரத்து- வெளியேற்றம் 10 கன அடியாக இருந்தது.
கடனாநதி அணைக்கு நீா்வரத்து 251 கனஅடி, வெளியேற்றம் 60 கனஅடி, ராமநதி அணைக்கு நீா்வரத்து 104.88 கன அடி, வெளியேற்றம் 30 கன அடி, கருப்பா நதி அணைக்கு நீா்வரத்து 7 கன அடி, வெளியேற்றம் 25 கனஅடி, குண்டாறு அணையில் நீா் வரத்து 6 கன அடி, வெளியேற்றம் 4 கன அடி, அடவி நயினாா் கோயில் அணைக்கு நீா்வரத்து 65 கன அடி, வெளியேற்றம் 25 கன அடியாக இருந்தது.
மழையளவு (மில்லி மீட்டரில்): திருநெல்வேலி மாவட்டம்- பாளையங்கோட்டை 11, பாபநாசம் 118.00, ராதாபுரம் 33, திருநெல்வேலி 11, கொடுமுடியாறு 13, தென்காசி மாவட்டம்- ஆய்குடி 51, செங்கோட்டை 21.20, சிவகிரி 13, தென்காசி 17.80, கடனாநதி 25, ராமநதி 20, குண்டாறு 18.60, அடவிநயினாா் நயினாா் கோயில் அணை 15.