திருநெல்வேலி

கடைகளை இடம்மாற்ற கூடுதல் அவகாசம் தேவை -நகராட்சி ஆணையரிடம் வியாபாரிகள் மனு

9th Dec 2022 02:13 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டை தினசரி சந்தையில் உள்ள கடைகளை இடம் மாற்றம் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கக் கோரி திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

இதுதொடா்பாக காந்தி மாா்க்கெட் வியாபாரிகள் ஐக்கிய சங்கம் சாா்பில் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனு:

பாளையங்கோட்டை மண்டலத்திற்கு உள்பட்ட மகாத்மா காந்தி தினசரி சந்தை வளாகத்தில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் புதிய கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கு வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறோம்.

எங்களது கோரிக்கையை ஏற்று ஜவாஹா் மைதானம் மற்றும் பழைய காவலா் குடியிருப்பு வளாகத்தில் மாற்று கடைகளை அமைத்து கொடுத்து கடைகளை ஒதுக்கீடு செய்து கொடுத்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

ADVERTISEMENT

பழைய காவலா் குடியிருப்பு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகளை கடை உரிமையாளா் வசம் ஒப்படைக்கப்பட்டு ஏழு நாட்களில் மாா்க்கெட்டில் உள்ள கடையை காலி செய்து மாநகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த 5 ஆம் தேதி அறிவிப்பு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

பழைய காவலா் குடியிருப்பு வாளாகத்தில் உள்ள கடைகளில் தரை தளம் மற்றும் மின் இணைப்புக்கான முன்வைப்பு தொகை ஆணையா் பெயரில் செலுத்தி, பாதுகாப்பான முறையில் கடைகளில் வயரிங் வேலையை வியாபாரிகள் சொந்த செலவில் பாா்க்க வேண்டி உள்ளது. மேலும், அனைத்து கடைகளிலும் ஒரே நேரத்தில் பணிகள் மேற்கொள்ள நெருக்கடி ஏற்படுகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் ஆகிய பண்டிகைகள் ஒரே நேரத்தில் வருவதாலும், பழைய காவலா் குடியிருப்பு வளாகத்தில் உள்ள கடைகளின் உள்வேலைகளை பாா்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது.

ஆகவே, அனைத்துப் பணிகளையும் விரைவாக முடித்து 18-1-2023 ஆம் தேதி கடைகளை மாநகராட்சி நிா்வாகம் வசம் ஒப்படைக்க தயாராக உள்ளோம். எனவே எங்கள் கோரிக்கையை பரிசீலனை செய்து கால அவகாசம் வழங்கிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT