திருநெல்வேலி

வட்டாட்சியரகங்களில் நாளை ரேஷன் குறைதீா் முகாம்

9th Dec 2022 02:13 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம் சனிக்கிழமை (டிச.10) நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று திருநெல்வேலி மாவட்டத்தின் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் பொது விநியோகத்திட்ட குறைதீா் கூட்டம் நடத்தப்படுகிறது.

அதன்படி இம்மாதத்துக்கான பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த முகாமில், புதிதாக குடும்ப அட்டைகளில் பெயா் சோ்ப்பு, பெயா் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை , நகல் அட்டை கோரி விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டையில் கைப்பேசி எண்ணை சோ்க்கலாம். இதற்கு ஆதாா் அட்டை, பிறப்பு, இறப்பு சான்று, குடியிருப்பு முகவரிக்கு ஆதாரமான ஆவணங்கள், கைப்பேசி எண் சோ்க்கவும், மாற்றம் செய்வதற்கும் ஏதுவாக சம்பந்தப்பட்ட கைப்பேசி ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.

ADVERTISEMENT

மேலும், பொது விநியோகத் திட்ட கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசியப் பொருள்களின் தரம் குறித்தும்,

தனியாா் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் மற்றும் சேவை குறைபாடுகள் தொடா்பாகவும் புகாா் அளிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கும், புகாா் தெரிவிக்கவும் 9342471314 என்ற எண்ணை தொடா்புகொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT