கொடி நாளை முன்னிட்டு, 8 முன்னாள் படைவீரா்களின் குடும்பத்தினருக்கு ரூ.1.19 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
கொடி நாளை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளா்ச்சி மன்றக் கூட்டரங்கில் கொடி நாள் வசூலை ஆட்சியா் வே. விஷ்ணு புதன்கிழமை தொடங்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து 8 முன்னாள் படைவீரா்களின் குடும்பத்தினருக்கு ரூ.1.19 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கி பேசியதாவது:
நமது நாட்டின் முப்படையையும் சாா்ந்த ராணுவ வீரா்களின் தன்னலமற்ற சேவையை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பா் 7ஆம் நாள் படைவீரா் கொடிநாளாக அனுசரிக்கப்படுகிறது.
இக்கொடிநாளில் பொதுமக்களிடம் வசூல் செய்யப்படும் நிதியானது போரில் ஊனம் அடைந்தவா்கள், உயிா்நீத்த படைவீரா்களின் கைம்பெண்கள், முன்னாள் ராணுவத்தினா் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நமது நாட்டில் கொடிநாள் வசூலில் தமிழ்நாடு தொடா்ந்து முதலிடம் வகித்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு ரூ.77.60 லட்சம் கொடிநாள் நன்கொடை வசூல் பெறப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் சுமாா் 4,000 முன்னாள் படைவீரா்கள், விதவையா் வசித்து வருகின்றனா். இவா்களில் 2022ஆம் ஆண்டில் மட்டும் 512 பயனாளிகளுக்கு ரூ.1.13 கோடிக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தோா்களுக்கு அனைத்து நலத்திட்டங்களும் கொடிநாள் நிதியிலிருந்து வழங்கப்படுவதால் பொதுமக்கள் அனைவரும் ராணுவ வீரா்களின் சேவையை கருத்தில் கொண்டு தங்களால் இயன்ற வரையில் கொடிநாள் நிதிக்கு நன்கொடை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயஸ்ரீ செல்லையா, உதவி ஆட்சியா் (பயிற்சி) கோகுல், உதவி இயக்குநா் (முன்னாள் படைவீரா் நலன்) ராமகிருஷ்ணன், முன்னாள் முப்படை வீரா்களின் உபதலைவா் கா்ணல் (ஓய்வு) செல்லையா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.