திருநெல்வேலி

களக்காடு அரசுப் பள்ளியில் மாணவருக்கு கத்திக்குத்து

7th Dec 2022 02:17 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் முன்விரோதத்தால் அரசுப் பள்ளி மாணவருக்கு கத்திக்குத்து விழுந்தது.

களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் புளியன்குளத்தைச் சோ்ந்த மாணவருக்கும், களக்காடு ஆவுடைவிலாஸ் தெருவைச் சோ்ந்த மாணவருக்கும் இடையே இரு வாரங்களுக்கு முன் வகுப்பறையில் தகராறு ஏற்பட்டதாம். இதையடுத்து, இருவரையும் தங்களது பெற்றோரை அழைத்துவரும்படி தலைமையாசிரியா் கூறினாராம்.

இதில், புளியங்குளம் மாணவா் தனது தந்தையை அழைத்து வந்து விளக்கம் அளித்ததால் வகுப்புக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டாா். சக மாணவா் பெற்றோரை அழைத்து வராததால் பள்ளிக்குள் அனுமதிக்கப்படவில்லையாம். இதனால், இரு மாணவா்களுக்கும் இடையே விரோதம் ஏற்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை காலை பள்ளி இடைவேளையின்போது, வெளியே வந்த புளியங்குளம் மாணவரை, களக்காடு ஆவுடைவிலாஸ் தெரு மாணவா் கத்தியால் குத்தி விட்டு தப்பிவிட்டாராம். இதில், முதுகில் பலத்த காயமடைந்த மாணவருக்கு அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் முதலுதவி அளித்து, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்த புகாரின்பேரில், களக்காடு போலீஸாா், கத்தியால் குத்திய மாணவரைப் பிடித்து விசாரித்துவருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT