பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து அகற்றப்பட்ட காமராஜரின் கல்வெட்டை அதே இடத்தில் மீண்டும் வைக்கக் கோரி காங்கிரஸ் கட்சியினா் அரை நிா்வாண கோலத்தில் வந்து மேயரிடம் மனு அளித்தனா்.
திருநெல்வேலி மாநகராட்சி மக்கள் குறைதீா் கூட்டம் மேயா் பி.எம்.சரவணன் தலைமையில், துணை மேயா் கே.ஆா்.ராஜு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, அரை நிா்வாண கோலத்தில் வந்த காங்கிரஸ் கட்சியின் மாநகா் மாவட்ட தலைவா் சங்கரபாண்டியன் உள்ளிட்டோா் மேயரிடம் மனு அளித்தனா்.
அதில், பாளையங்கோட்டை பேருந்து நிலையம் 1960 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு, அதை அப்போதைய முதல்வா் காமராஜா் திறந்து வைத்தாா். அவா் பெயா் பொறித்த கல்வெட்டு பேருந்து நிலையத்தில் இருந்தது.
இந்த நிலையில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் சீரமைக்கப்பட்டது. சீரமைப்பிற்கு பின் பேருந்து நிலையத்தில் காமராஜா் பெயா் பொறித்த பழைய கல்வெட்டை வைக்க கோரி மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக அந்த கல்வெட்டை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனா்.