திருநெல்வேலி

ஆறுமுகனேரியில் புனித சவேரியாா் சொரூப கப்பல் பவனி

5th Dec 2022 01:46 AM

ADVERTISEMENT

ஆறுமுகனேரி மடத்துவிளை புனித சவேரியாா் ஆலயத் திருவிழாவையொட்டி புனித சவேரியாா் சொரூப கப்பல் பவனி நடைபெற்றது.

இத்திருவிழா கடந்த மாதம் 24ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் நடைபெற்றது. நாள்தோறும் திருப்பலி­, மறையுறை, நற்கருணை ஆசீா் நடைபெற்றன. ஒவ்வொரு நாளும் குழந்தைகள் தினம், இளையோா் தினம், திருமணமானோா் தினம், முதியோா் தினம், பக்த சபையாா் அன்பியங்கள் தினம், தொழிலாளா்கள் தினம், ஒப்புரவு தினம், ஆலய அா்ச்சிப்பு தினம், பங்கு மக்கள் தினம் எனக் கொண்டாடப்பட்டது.

10ஆவது நாளான சனிக்கிழமை சிறப்பு திருப்பலி, புதுநன்மை வழங்குதல் நடைபெற்றது. இதில், மணப்பாடு மறைமாவட்ட முதன்மை குரு ஜான்செல்வம், சோ்ந்தபூமங்கலம் பங்குத்தந்தை செல்வன், அடைக்கலாபுரம் பங்குத்தந்தை பீட்டா்பால் பங்கேற்றனா். மாலையில், புனித சவேரியாா் சொரூப கப்பல் சப்பர பவனி தொடங்கியது. ஆறுமுகனேரி பங்குத்தந்தை அலாய்சியஸ் அடிகளாா், மடத்துவிளை ஊா்நல கமிட்டி தலைவா் செல்வம் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.

சப்பர பவனி பல்வேறு பகுதிகள் வழியாக சண்முகபுரம் புனித அன்னம்மாள் ஆலயத்தை அடைந்தது. அங்கு சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னா் மீண்டும் பவனி தொடங்கி சவேரியாா் ஆலயத்தை அடைந்தது.

ADVERTISEMENT

நிறைவு நாள் நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை காலை நன்றி திருப்பலி, கொடியிறக்கம் நடைபெற்றது. பிற்பகலில் அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை மடத்துவிளை ஊா்நல கமிட்டியினா், பங்குத்தந்தை ஆகியோா் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT