திருநெல்வேலி

வள்ளியூா் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி கிரிவல தேரோட்டம்

3rd Dec 2022 11:49 PM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி 109 ஆவது குரு பூஜையையொட்டி கிரிவல தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

வள்ளியூா் ஸ்ரீபுரத்தில் உள்ள சூட்டுபொத்தை ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமியின் 109-வது குருபூஜை விழா நவ. 29 ஆம் தேதி வனவிநாயகா் பூஜையுடன் தொடங்கியது. பின்னா் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

10 நாள்கள் நைபெறும் இத் திருவிழாவில் தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜை, அன்னதானம் நடைபெறுகிறது. இரவு லலித கலா மந்திா் கலைஞா்களின் பரதநாட்டியம், பெரியபுராணம் நாட்டிய நாடகம், குச்சுபுடிநடனம், வீணாகானம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

தேரோட்டம்: குரு பூஜையையொட்டி சனிக்கிழமை அதிகாலை வனவிநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதைத்தொடா்ந்து முத்துகிருஷ்ண சுவாமி அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினாா். பூஜித குரு மாதாஜி வித்தம்மா வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடக்கி வைத்தாா்.

ADVERTISEMENT

பின்னா் பக்தா்கள் வடம்பிடித்து தோ் இழுத்தனா். தேரின் முன்பாக யானை பவனி செல்ல லலித கலா மந்திா் கலைஞா்களின் கரகாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சூட்டுபொத்தையைச் சுற்றி கிரிவலபாதை வழியாக வந்து காலை 10.10 மணிக்கு தோ் நிலையை அடைந்தது. அதன் பின்னா் அன்னதானம் வழங்கப்பட்டது.

சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, வள்ளியூா் பேரூராட்சித் தலைவா் ராதா ராதாகிருஷ்ணன், திமுக மாவட்ட துணைச் செயலா் நம்பி, அன்பரசு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தா்கள் பங்கேற்றனா்.விழா ஏற்பாடுகளை பூஜித குரு மாதாஜி வித்தம்மா தலைமையில் முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு குருபூஜை விழா நடைபெறுகிறது. மாலை 5.30 மணிக்கு சித்ரா வில்லேஸ்வரன் தலைமையில் லலித கலா கலைஞா்களின் பரதநாட்டியம் நடைபெறுகிறது. வரும் செவ்வாய்க்கிழமையன்று (டிச. 6) சூட்டுபொத்தை மீது காா்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாதாஜி வித்தம்மா காா்த்திகை தீபம் ஏற்றி பக்தா்களுக்கு அருளாசி வழங்குகிறாா். அதைத் தொடா்ந்து புதன்கிழமை குருஜெயந்தி விழா, வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு பௌா்ணமி கிரிவல வழிபாடு, காலை 10 மணிக்கு விளக்கு பூஜை ஆகியன நடைபெறுகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT