திருநெல்வேலி

விலை வீழ்ச்சி: கால்நடை உணவாகும் தக்காளி!

2nd Dec 2022 03:43 AM

ADVERTISEMENT

மானூா் சுற்றுவட்டார பகுதிகளில் விலை வீழ்ச்சி காரணமாக தக்காளியை கால்நடைகளுக்கு உணவாகவும், வயலுக்கு உரமாகவும் வீசும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மானூா் சுற்றுவட்டார பகுதிகளான தென்கலம், செழியநல்லூா், பள்ளமடை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கிணற்று பாசனத்தை நம்பி மலா் சாகுபடி, காய்கனி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நிகழாண்டில் வெண்டை, கத்தரி, தக்காளி ஆகியவை அதிகம் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் தக்காளிக்கு நல்ல விலை கிடைத்து வந்தது. தற்போது, ஆந்திர மாநிலத்தில் இருந்து தக்காளி வரத்து மிகவும் அதிகரித்துள்ளதாலும், தமிழகத்தில் பல இடங்களில் மகசூல் அதிகரிப்பாலும் தக்காளி விலை மிகவும் சரிந்துள்ளது. தோட்டங்களில் இருந்து கிலோவுக்கு ரூ.2 முதல் ரூ.5 வரை மட்டுமே விலை கொடுத்து மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகிறாா்கள். போதிய விலையின்மையால் விற்பனை செய்யாமல் தக்காளியைப் பறித்து கால்நடைகளுக்கு உணவாகவும், வயலுக்கு உரமாகவும் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து பள்ளமடையைச் சோ்ந்த விவசாயிகள் கூறியது: புரட்டாசி, ஐப்பசி, காா்த்திகை, மாா்கழி மாதங்களில் காய்கனிகளின் தேவை அதிகரிக்கும். பொங்கல் பண்டிகை வரை விலை எளிதில் குறையாது. அதனை கருத்தில் கொண்டே மானூா் வட்டாரத்தில் பல விவசாயிகள் நிகழாண்டில் வெண்டை, தக்காளி சாகுபடி செய்தோம். ஆனால், ஆந்திரத்தில் நிகழாண்டில் தக்காளி விளைச்சல் மிகவும் அதிகரித்துள்ளது. அதனால் கொள்முதல் விலை மிகவும் குறைந்துள்ளது. காய்கனி சாகுபடியில் ஆள்களுக்கான சம்பளம் மிகவும் அதிகரித்துள்ளது. வெண்டை, மிளகாய், தக்காளி ஆகியவற்றுக்கு அறுவடை கூலியாக நாள் ஒன்றுக்கு ரூ.250-ம், மருத்து அடிக்க தலா ரூ.1000-ம் செலவாகிறது. விற்பனைக்கு கொண்டு செல்ல வாகன வாடகையும் அதிகரிப்பதால் கால்நடைகளுக்கே உணவாக கொடுத்து வருகிறோம். குளிா்பதன கிடங்கு உள்ளிட்ட வசதிகளை தமிழக அரசு மேம்படுத்த வேண்டும். அப்போதுதான் விலைவீழ்ச்சி காலங்களில் விவசாயிகள் பயன்பெற முடியும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT