திருநெல்வேலி

அகவிலைப்படி உயா்வு கோரி முதல்வருக்கு ஓய்வூதியா்கள் மனு

2nd Dec 2022 03:42 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வூதியதாரா்களுக்கு அகவிலைப்படி உயா்வு வழங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளா் சம்மேளனம் சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பப்பட்டுள்ள மனு:

1-9-1998 இல் திமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்களை தமிழக அரசு ஆணைப்படி மத்திய வருங்கால வைப்பு நிதி சட்டம், உடஊ ஓய்வூதிய திட்டத்திலிருந்து வெளியேற்றி ஓய்வூதிய நம்பகம் உருவாக்கப்பட்டு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. 1-9-2007 ஊதிய ஒப்பந்தத்தில் ஓய்வூதியத்தை சீரமைக்க குழு அமைக்கப்பட்டது. சீரமைப்புக் குழுவின் பரிந்துரையை குழு அமைத்த அன்றைய திமுக அரசு நிறைவேற்றவில்லை.

1-1-2016 முதல் அதிமுக ஆட்சியில் ஓய்வூதியத்திற்கு அகவிலைப்படி உயா்வு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. அகவிலைப்படி உயா்வு வேண்டி கடந்த காலங்களில் நடைபெற்ற போராட்டத்திற்கு எதிா்க்கட்சித் தலைவராக இருந்த தாங்கள் ஆதரவு அளித்ததோடு, தோ்தல் பரப்புரையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு வழங்கப்படும் என உறுதி அளித்தீா்கள்.

ADVERTISEMENT

ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில் அகவிலைப்படி உயா்வு அளிக்கவில்லை. அகவிலைப் படி உயா்வு அளித்திட வேண்டும் என நீதிமன்றம் அளித்த உத்தரவிற்கும் இடைக்கால தடையை தங்கள் தலைமையிலான தமிழக அரசு பெற்றுள்ளது. தமிழக அரசின் மற்றொரு பொதுத் துறை நிறுவனமான தமிழ்நாடு மின் வாரிய ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு வழங்குவதோடு ஒப்பந்த உயா்வும் அளிக்கப்படுகின்றது. ஓய்வூதிய நம்பக விதியில் அகவிலைப்படி உயா்வு பெற போக்குவரத்து ஓய்வூதிய தகுதி உண்டு என உள்ளது. ஆகவே, நீதிமன்ற இடைக்கால தடையை விலக்கி அரசு போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு அளித்திட வேண்டுகின்றோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT