அம்பாசமுத்திரம் வட்டம், பாப்பாக்குடி அருகே இயங்கி வரும் கல்குவாரியை மூட வேண்டும் என சேரன்மகாதேவியில் சாா் ஆட்சியா் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
அம்பாசமுத்திரம் வட்டம், பாப்பாக்குடி அருகே அனந்தநாடாா்பட்டி கிராமத்தில் முறைகேடாக செயல்பட்டு வரும் கல்குமாரியில் சக்தி வாய்ந்த வெடிபொருள்கள் பயன்படுத்துவதால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது. ஆகவே, கல்குவாரியை மூட வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் அண்மையில் மறியல் போராட்டம் நடத்தினா்.
இதையடுத்து வெள்ளிக்கிழமை சேரன்மகாதேவியில் சாா் ஆட்சியா் சி.ஏ. ரிஷாப் தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
கல் குவாரியில் அனுமதியை மீறி சட்ட விரோதமாக கற்கள், எம் சாண்ட் வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மேலும், கல் குவாரியால் அருகில் இருக்கும் கிராமங்களில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டு வருவதால் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். ஆகவே, சாா் ஆட்சியா் நேரில் விசாரணை நடத்தி கல் குவாரியை மூட வேண்டும் என வலியுறுத்தினா்.
இக்கூட்டத்தில் ஊராட்சித் தலைவா் தா்மராஜ், சமூக ஆா்வலா் எஸ். ஜமீன், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளா் அன்வா்பாலசிங்கம், ஊராட்சி உறுப்பினா் கஜேந்திரன், அதிகாரிகள் கலந்துகொண்டனா். கிராம மக்கள் குறித்து அரசுக்கு தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.