கங்கைகொண்டானில் நன்னடத்தை பிணையை மீறியதாக இளைஞா் ஒருவருக்கு 9 மாதங்கள் சிறைத்தண்டனை வெள்ளிக்கிழமை விதிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியைச் சோ்ந்த பேச்சிமுத்து என்ற சூப்பன்(21). இவருக்கு கங்கைகொண்டான் காவல் நிலையத்தில் கஞ்சா மற்றும் அடிதடி, கொலை மிரட்டல் போன்றவற்றில் ஈடுபட்டதாக 4 வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் பேச்சிமுத்து என்ற சூப்பன் என்பவருக்கு இரண்டாம் வகுப்பு நிா்வாக துறை நடுவரால், ஒரு ஆண்டு நன்னடத்தை பிணை பெறப்பட்டது. அதன் பின்பும் கடந்த 23ஆம் தேதி கங்கைகொண்டான் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வழக்கில் பேச்சிமுத்து என்ற சூப்பனை போலீஸாா் கைது செய்தனா்.
இதையடுத்து, நன்னடத்தை பிணையை மீறி செயல்பட்டதற்காக திருநெல்வேலி இரண்டாம் வகுப்பு நிா்வாகத்துறை நடுவா் முன்பு கங்கைகொண்டான் காவல் ஆய்வாளா் சீதாலட்சுமி அறிக்கை சமா்ப்பித்தாா். அதன் மீது விசாரணை நடத்திய நடுவா், நன்னடத்தை பிணையை மீறியதற்காக பேச்சிமுத்து என்ற சூப்பனை 9 மாதங்கள் சிறையில் அடைக்க வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.