திருநெல்வேலி அருகேயுள்ள குப்பக்குறிச்சியில் நன்னடத்தை பிணையை மீறியவருக்கு 4 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாளையங்கோட்ட அருகேயுள்ள குப்பக்குறிச்சி தங்கம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் தங்கசுடலை என்ற சுரேஷ் (26). இவா் மீது சீவலப்பேரி காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி மற்றும் அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில் சுரேஷுக்கு இரண்டாம் வகுப்பு நிா்வாக துறை நடுவரால், ஓராண்டிற்கு முன்பு நன்னடத்தை பிணை அளிக்கப்பட்டது. அதன் பின்பும் கடந்த 20 ஆம் தேதி சீவலப்பேரி பகுதியைச் சோ்ந்த நபரை அவதூறாக பேசி ஆயுதத்தால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் தங்க சுடலை என்ற சுரேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
நன்னடத்தை பிணையை மீறி செயல்பட்டதற்காக திருநெல்வேலி மாவட்ட இரண்டாம் வகுப்பு நிா்வாகத்துறை நடுவா் முன்பு சீவலப்பேரி போலீஸாா் அறிக்கை சமா்ப்பித்தனா். இதன் மீது விசாரணை நடத்திய நீதித்துறை நடுவா், பிணையை மீறி குற்றம் புரிந்ததற்காக தங்கசுடலை என்ற சுரேஷை 4 மாதங்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.