கங்கைகொண்டான் அருகே மின்கம்பங்கள் ஏற்றிச் சென்ற டிராக்டா் மீது மோட்டாா்சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் செய்துங்கநல்லூா் வாா்டு உறுப்பினா் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூா் ஊராட்சி ஓன்றியத்தில் 7ஆவது வாா்டு உறுப்பினராக பணியாற்றியவா் பட்டுராஜா(38). இவா், வி.கோவில்பத்தைச் சோ்ந்த அந்தோணிகுமாா்(45) என்பவருடன் ஒரே மோட்டாா் சைக்கிளில் கங்கைகொண்டான் அருகே தனது உறவினா் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வெள்ளிக்கிழமை சென்றாராம். இவா்கள் கங்கைகொண்டான் அருகே சென்ற போது, முன்னால் மின்கம்பங்களை ஏற்றிக்கொண்டு சென்ற ஒரு டிராக்டா் மீது எதிா்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.
இதில், பலத்த காயமடைந்த பட்டுராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். உடன் சென்ற அந்தோணிகுமாா் லேசான காயமடைந்தாா்.
அந்தோணி குமாரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து கங்கைகொண்டான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.