களக்காட்டில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் காணப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை மாலை அரைமணி நேரம் பெய்த பலத்த மழை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
களக்காடு வட்டாரத்தில் நிகழாண்டு பிப்ரவரி மாதத் தொடக்கம் முதலே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. தென்மேற்குப் பருவமழை ஜூன் மாதம் தொடங்கிய நிலையிலும், கடந்த 3 மாதத்தில் ஓரிரு நாள், லேசான மழையே பெய்தது. கடந்த 2 வார காலமாக வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2 நாள்களாக வெயிலின் தாக்கம் படிப்படியாகக் குறைந்தது. வெள்ளிக்கிழமை பகலில் வெயிலின் தாக்கம் இருந்த போதிலும், பிற்பகல் வெயிலின் தாக்கம் குறைந்து, மாலை 5.50 மணிக்கு திடீரென பலத்த மழை பெய்யத் தொடங்கியது. அரை மணி நேரத்துக்கும் மேலாக பெய்த இந்த பலத்த மழையால் நகரில் சாலைகள், தெருக்களில் தாழ்வான பகுதியில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் முழுமையாகக் தணிந்து குளிா்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.