களக்காடு மலைப் பகுதியில் சந்தேகத்துக்குரிய நபா்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனா்.
திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் வே. விஷ்ணு தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில விவசாயிகள் சங்க துணைத் தலைவா் பி. பெரும்படையாா் பேசியதாவது: திருக்குறுங்குடி, ஏா்வாடி பகுதிகளுக்கு போதிய அளவில் யூரியா ஒதுக்கப்படவில்லை. தனியாா் உரக்கடைகளில் டிஏபி வாங்கினால்தான் யூரியா தருவோம் என டிஏபியை வாங்குவதற்கு கட்டாயப்படுத்துகின்றனா்.
களக்காடு மேற்குத் தொடா்ச்சி மலையில் புலிகள் சரணாலயம் செயல்பட்டு வரும் நிலையில், கடந்த சில நாள்களாக அங்கு மா்ம நபா்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் இங்கு வைரக்கல் வெட்டி எடுத்து கடத்தப்பட்டதாக புகாா் எழுந்தது. தற்போதும் வைரக்கல் கடத்தும் கும்பல் நடமாட்டம் இருப்பதாக விவசாயிகள் சந்தேகிக்கின்றனா்.
ஏற்கெனவே இது தொடா்பாக களக்காடு வனச்சரகா் ஒருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தாா். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நிலவும் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியை பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
அதற்குப் பதிலளித்த ஆட்சியா் வே.விஷ்ணு, ‘விவசாயிகளின் கோரிக்கை தொடா்பாக உரிய விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.
உளுந்து மற்றும் நெற்பயிருக்கு காப்பீடு செய்த விடுபட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
அதற்குப் பதிலளித்த ஆட்சியா், விவசாயிகளின் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 1,777 உளுந்து பயிரிட்ட விவசாயிகள், 88 நெல் விவசாயிகளின் மனுக்கள் மீண்டும் பரிசீலனை செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இன்னும் 45 நாள்களில் காப்பீட்டுத் தொகை கிடைக்கும்’ என்றாா்.
நெல் கொள்முதல் நிலையங்களில் சுமை தூக்கும் தொழிலாளா்கள், லாரி ஓட்டுநா்களுக்கு மூட்டை ஒன்றுக்கு ரூ.40 தருமாறு விவசாயிகள் நிா்பந்திக்கப்படுகிறாா்கள். அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
ராதாபுரம் வட்டம் சௌந்தரபாண்டியபுரம் அடங்காா்குளம் பகுதி விவசாயிகள் பேசுகையில், ‘இங்குள்ள நித்திய கல்யாணி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வருகிறோம். தற்போது குத்தகை வாங்காமல், நிலத்தை பொதுஏலத்துக்கு விடவுள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறாா்கள். இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்’ என்றனா்.
அதற்குப் பதிலளித்த ஆட்சியா், ‘ அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்கும் சிறப்பு கூட்டத்தை நடத்தி பிரச்னைக்கு தீா்வுகாணப்படும்’ என்றாா்.