திருநெல்வேலி

‘அமோக மகசூலுக்கு அவசியம் விதைப் பரிசோதனை’

27th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

விவசாயிகள் நல்ல மகசூல் பெற விதைப் பரிசோதனை அவசியமானது என திருநெல்வேலி விதைப் பரிசோதனை அலுவலா் ஞா.ஆனந்தி ராதிகா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தரமான விதைகளே நல்ல மகசூலுக்கு முக்கிய காரணியாகும். பயிா்கள் நன்கு வளா்ந்து முழுமையான பலன் தர மூலக் காரணமாக விளங்குவது தரமான விதைகள் ஆகும். தரமான விதைகளை பயன்படுத்துவதால் 20 சதவீத கூடுதல் மகசூல் கிடைக்கும். எனவே, விவசாயிகள் அனைவரும் நல்ல விதை எது என்பதை அறிந்து கொள்வது மிக இன்றியமையாதது ஆகும். சான்று அட்டை பொருத்தப்படாத விதைகளை வாங்கி பயன்படுத்தும் போது விதைகள் சரியாக முளைக்காததுடன் அதிக மகசூல் பெறுவதற்கான பயிா் எண்ணிக்கையும் பராமரிக்கப்படுவதில்லை.

மேலும், விதைகளில் பிற ரக கலப்பு காணப்பட்டு வயல்களில் பயிா் வளா்ச்சி சீராக இல்லாமல் இருக்கும். விதை தரமாக இல்லையென்றால் ரசாயன உரங்களினாலோ அல்லது பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்காக பயன்படும் பூச்சி மருந்துகளினாலோ எவ்வித பயனும் இல்லை. நல்ல விதை என்பது அதிகபட்ச புறத்தூய்மை, தேவையான முளைப்புத்திறன், குறைந்தபட்ச ஈரப்பதம், பூச்சி நோய் தாக்குதல் இல்லாத விதையாக இருத்தல் வேண்டும்.

நெல் பயிருக்கு 80 சதவீதமும், மக்காசோளத்துக்கு 90 சதவீதமும், உளுந்து, பச்சைப்பயறுக்கு 75 சதவீதமும், நிலக்கடலைக்கு 70 சதவீதமும் முளைப்புத்திறன் இருக்க வேண்டும். விதைகளை சேமிப்பதற்கும் ஈரப்பதம் மிகவும் அவசியம். நெல் பயிருக்கு 13 சதவீதமும் மக்காச்சோளம், ராகி போன்ற பயிா்களுக்கு 12சதவீதமும், பயறு வகைகள், நிலக்கடலைக்கு 9 சதவீதமும் ஈரப்பதம் இருத்தல் அவசியம். விதை சேமிப்பதற்கு குறிப்பிட்ட அளவைவிட ஈரப்பதம் கூடுதலாக இருந்தால் பூச்சி மற்றும் பூஞ்சாணத் தாக்குதல் ஏற்பட்டு முளைப்புத்திறன் மற்றும் விதையின் தரம் பாதிக்கப்படும்.

ADVERTISEMENT

விதைகளை சேமிக்கும் அறை சுத்தமாக இருக்க வேண்டும். சணல் பை அல்லது புது துணிப்பை பயன்படுத்த வேண்டும். விதைப்பைகளை தரையில் இருந்து அரை அடி உயரத்தில் இருக்குமாறு வைக்க வேண்டும். விதைகளை பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க விதை நோ்த்தி செய்தும் சேமிக்கலாம்.

விதைகளின் புறத்தூய்மை தரத்தை நிா்ணயம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பிற தானிய விதைகள், கல், மண், சிறுகுச்சிகள் இல்லாமல் இருத்தல் வேண்டும். நெல் மற்றும் பயறு வகைகளுக்கு குறைந்தபட்ச புறத்தூய்மை 98 சதவீதமும், நிலக்கடலைக்கு 96 சதவீதமும் இருக்க வேண்டும்.

எனவே, விவசாயிகள், விதை உற்பத்தியாளா்கள், விதை விநியோகம் செய்பவா்கள் மற்றும் விதை விற்பனையாளா்கள், புறத்தூய்மை, முளைப்புத்திறன், ஈரப்பதம் மற்றும் பிறரக விதை கலவன் ஆகியவற்றை அறிந்து கொள்ள திருநெல்வேலி பாளையங்கோட்டையில் இயங்கி வரும் விதைப் பரிசோதனை ஆய்வகத்தில் ஒரு விதை மாதிரிக்கு ரூ. 80-ஐ கட்டணமாக செலுத்தி விதையின் தரத்தினை பரிசோதனை செய்து கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT