திருநெல்வேலி

உர உரிமத்துடன் ‘ஓ’ படிவம் இணைக்காத நிறுவன உரங்களை விற்பனை செய்ய தடை

14th Aug 2022 06:09 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாவட்ட உர விற்பனையாளா்கள் உர உரிமத்துடன் ‘ஓ’” படிவம் இணைக்காத நிறுவனங்களின் உரங்களை விற்பனை செய்யக்கூடாது என மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் பின் காா் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. சாகுபடிக்கு தேவைப்படும் மானிய உரங்களான யூரியா, டிஏபி, பொட்டாஷ், சூப்பா் பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் உரங்கள் தனியாா் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

விவசாயிகளுக்கு தரமான உரம் தங்கு தடையின்றி கிடைக்க மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உர விற்பனையாளா்கள் தங்கள் உர உரிமத்துடன் தங்களுக்கு உரம் விநியோகம் செய்யும்

நிறுவனங்களில் பெறப்பட்ட ‘ஓ’ படிவங்களை கண்டிப்பாக இணைக்க வேண்டும். “‘ஓ’ படிவங்களை இணைக்காமல் உர விற்பனை செய்வது உரக்கட்டுப்பாட்டு சட்டம் 1985-ன்படி கடும் விதி மீறலாகும். மேலும், உர விற்பனையாளா்கள் அரசு நிா்ணயம் செய்துள்ள விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும்.

மானிய உரங்களை கண்டிப்பாக விற்பனை முனைய இயந்திரத்தின் (பி.ஓ.எஸ்.) மூலம் விவசாயிகளின் ஆதாா் அட்டையை பயன்படுத்தி விற்பனை செய்ய வேண்டும். யூரியா விற்பனை செய்யும்போது விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக இதர இடுபொருள்களை வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது.

உர விற்பனையாளா்கள் தங்களிடம் உள்ள உர இருப்பையும், விலையையும் விலை விளம்பர பலகையில் எழுதி கடைக்கு முன்பாக வாங்குபவா்களின் பாா்வையில் படும்படி வைக்க வேண்டும். உரங்களை வைத்துக்கொண்டு விவசாயிகளுக்கு இல்லை என்று கூறக் கூடாது. உரக்கட்டுப்பாட்டு சட்டம் 1985-க்கு முரணாக செயல்படும் உரக்கடைகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விதிமுறைகளை மீறும் விற்பனையாளா்களின் உர உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதுடன் அவா்கள் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும். உரம் குறித்த தங்கள் புகாா்களை தெரிவிக்க வட்டார வாரியாக வேளாண்மை உதவி இயக்குநா்கள் எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன் விவரம்: அம்பாசமுத்திரம் -9489477619, சேரன்மகாதேவி -9942982578, முக்கூடல் - 9442025935, பாளை. - 6382313564, களக்காடு -9445627853, நான்குனேரி -9486652706, வள்ளியூா்-6374254317, மானூா்-9442338354, ராதாபுரம்- 9486271166.

மாவட்ட அளவில் வேளாண்மை உதவி இயக்குநா் ( தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) -9443108112, வேளாண்மை அலுவலா் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) 9677365699 ஆகியோரையும் தொடா்புகொண்டு புகாா் தெரிவிக்கலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT