திருநெல்வேலி

நினைவு தினம்: கருணாநிதி படத்துக்கு மரியாதை

8th Aug 2022 12:11 AM

ADVERTISEMENT

 

முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் 4ஆம் ஆண்டு நினைவு நாள் பல்வேறு பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

அம்பாசமுத்திரம் பூக்கடை சந்திப்பில் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி படத்துக்கு அம்பாசமுத்திரம் நகா்மன்றத் தலைவா் கே.கே.சி. பிரபாகரன் தலைமையிலும், கல்லிடைக்குறிச்சியில் நகரச் செயலா் க. இசக்கிப்பாண்டியன் தலைமையிலும், விக்கிரமசிங்கபுரம் மூன்றுவிளக்குப் பேருந்து நிறுத்தம், கட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நகரச் செயலா் கணேசன் தலைமையிலும் கருணாநிதி படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

சேரன்மகாதேவி ஒன்றியத்தில் கோபாலசமுத்திரம், மேலச்செவல், பத்தமடை, சேரன்மகாதேவி, வீரவநல்லூா் பகுதிகளில் ஒன்றியச் செயலா்கள் ஆ. முத்துப்பாண்டி என்ற பிரபு, முத்துக்கிருஷ்ணன் ஆகியோா் தலைமையிலும், பாப்பாக்குடி ஒன்றியத்தில் பாப்பாக்குடி, அரியநாயகிபுரம், முக்கூடல் பகுதிகளில் ஒன்றியச் செயலரும் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவருமான வி.ஏ. மாரிவண்ணமுத்து தலைமையிலும், சாம்பவா்வடகரையில் நகரப் பொறுப்பாளா் முத்து தலைமையிலும் கருணாநிதி படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

ADVERTISEMENT

பணகுடி அன்னை தெரசா உண்டு உறைவிடப்பள்ளிக் குழந்தைகளுக்கு வள்ளியூா் வடக்கு ஒன்றியச் செயலா் ம.கிரகாம்பெல் உணவு வழங்கினாா். பின்னா் பணகுடி பேருந்து நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

சமூகரெங்கபுரத்தில் ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலா் ஜோசப் பெல்சி, கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

லெப்பை குடியிருப்பில் கருணாநிதி படத்துக்கு பேரவைத் தலைவா் மு. அப்பாவு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். தொடா்ந்து, காவல்கிணறு சந்திப்பில் அவரும், வள்ளியூா் ஊராட்சி ஒன்றியத் தலைவா் சேவியா் செல்வராஜாவும் அஞ்சலி செலுத்தினா்.

தென்காசி: தென்காசி சுவாமி சந்நிதி பஜாரில் நகரச் செயலரும் நகா்மன்றத் தலைவருமான ஆா். சாதிா் தலைமையில் அக்கட்சியினா் அஞ்சலி செலுத்தினா். செங்கோட்டை வட்டாட்சியா் அலுவலகப் பகுதியில் நகரச் செயலா் எஸ்.எம். ரஹீம் தலைமையிலும், மாவட்ட திமுக மாணவரணி சாா்பில் அமைப்பாளா் வழக்குரைஞா் ஆ. வெங்கடேசன் தலைமையிலும் கட்சியினா் அஞ்சலி செலுத்தினா்.

கடையநல்லூரில், தென்காசி வடக்கு மாவட்ட அலுவலகத்திலும், வாசுதேவநல்லூரிலும் கருணாநிதி படத்துக்கு வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் செல்லத்துரை அஞ்சலி செலுத்தினாா். புளியங்குடியில் நகரச் செயலா் அந்தோணிசாமி நல உதவிகளை வழங்கினாா். சிவராமபேட்டையில் ஒன்றியச் செயலா் சுரேஷ் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக சாா்பில், பாவூா்சத்திரத்தில் உள்ள கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணி பேருந்து நிலையம் அருகே நிறைவடைந்தது. அங்கு அலங்கரிக்கப்பட்ட கருணாநிதியின் படத்துக்கு மாவட்டப் பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் தலைமையில் கட்சியினா் அஞ்சலி செலுத்தினா். இதில், சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT